Last Updated : 01 Jul, 2019 04:01 PM

 

Published : 01 Jul 2019 04:01 PM
Last Updated : 01 Jul 2019 04:01 PM

கல்லூரி ஆசிரியர் நியமன சட்டதிருத்த மசோதாவுக்கு விசிக எதிர்ப்பு

கல்லூரி ஆசிரியர் நியமனம் தொடர்பான சட்டதிருத்த மசோதா இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் டி.ரவிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் எம்.பியான ரவிகுமார் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் கல்லூரி ஆசிரியர் நியமனம் தொடர்பான சட்டத் திருத்தம் முன்பிருந்த இட ஒதுக்கீட்டுக்கொள்கையை பாதுகாக்கிறது.

அந்த விதத்தில் அதை ஆதரிக்கலாம். ஆனால் இதில் முன்னேறிய சாதியினரில் பொருளாதாரரீதியில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டிருக்கிறது.

அதை எதிர்த்தாகவேண்டும். ஏனெனில் ஏற்கனவே கல்லூரி ஆசிரியர்களாக இருப்பவர்களில்  சுமார் 65% பேர் முன்னேறிய சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

2015 -16 ஆம் வருடத்திற்கான உயர்கல்வித்துறை அறிக்கையின்படி இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 15,18,813 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்களில்  65 % பொதுப் பிரிவு எனப்படும் முன்னேறிய சாதிகளைச் சேர்ந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) 25.4% உள்ளனர். எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 7.5% ம், எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 2.1% ம் தான் ஆசிரியர்களாக உள்ளனர்.

முஸ்லிம்கள் 3.4% ம் கிறித்தவர்கள் உள்ளிட்ட பிற மதச் சிறுபான்மையினர் 3.3% ம் தான் ஆசிரியர்களாக இருக்கின்றனர். (ஆதாரம்: AISHE 2015-16 பக்கம் 25)

இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 11,25,027 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உள்ளன.

அதில் 58.75% பொதுப்பிரிவு என்னும் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களும் 24.82% இதர பிற்பட்ட வகுப்பினரும், 12.86% எஸ்சி பிரிவினரும் , 3.57% எஸ்டி பிரிவினரும் உள்ளனர் இது மத்திய அரசின் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம்.

ஏற்கனவே கல்லூரி ஆசிரியர்களாக இருக்கும் முன்னேறிய சாதியினரில் எவ்வளவுபேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலிருந்து வந்தவர்கள் என ஆய்வுசெய்யப்பட்டது. இதில், அவர்கள் போதுமான அளவு இல்லை என உறுதி செய்யப்பட வேண்டும்.

அதன்பிறகே இந்த 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே தமக்குரிய இடங்களைப் பெற முடியாமல் தவிக்கும் பிற்படுத்தப்பட்டோர் / எஸ்சி/ எஸ்டி பிரிவினர் மேலும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x