Published : 13 Jul 2019 03:02 PM
Last Updated : 13 Jul 2019 03:02 PM
தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பிற்கான (டிஆர்டிஓ) புதிய ஆராய்ச்சி மையத்தை செயல்படுத்தக் கோரப்பட்டுள்ளது.
இதை அத்தொகுதியின் திமுக எம்பியான டாக்டர்.எஸ்.செந்தில்குமார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க தர்மபுரியில் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலம், நல்லம்பள்ளி தாலுகாவின் நெக்குந்தி கிராமத்தில் 850 ஏக்கர்களையும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட இந்நிலத்தை, தமிழக அரசும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் புதிய ஆராய்ச்சி மையம் செயல்படுவதற்காக ஏற்கனவே வழங்கியுள்ளது. இதனை விரைந்து செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து திமுக எம்.பி செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டாக்டர்.செந்தில்குமார் எம்.பி கூறும்போது, ‘மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் அதிக வேலைவாய்ப்பின்மை நிலவுகின்றது.
இந்த சூழலில் இங்கு டிஆர்டிஓவின் புதிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுவதால், எனது தொகுதி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் திறன் மற்றும் திறனற்ற தொழிலாளர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தக் கோரி, அமைச்சர் ராஜ்நாத்திடம் வலியுறுத்தினேன்.’ எனத் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் 17 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூலை 26-ல் முடிவடைய உள்ளது. இதில் கலந்துகொள்ள வரும் தமிழக எம்.பிக்களில் சிலர் பல்வேறு துறைகளின் அமைச்சர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அப்போது அவர்கள் தொகுதி வளர்ச்சிக்காக மனுக்களை அளித்தும் வருகின்றனர். இந்தவகையில், முதல்முறை எம்பியான செந்தில்குமாரும் தமது தர்மபுரி தொகுதிக்காக பல மத்திய அமைச்சர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT