Last Updated : 01 Jul, 2019 01:13 PM

 

Published : 01 Jul 2019 01:13 PM
Last Updated : 01 Jul 2019 01:13 PM

4 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: மக்களவையில் நவாஸ்கனி வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைதான நான்கு தமிழக மீனவர்களை உடனடியான விடுவிக்க மக்களவையில் ராமநாதபுரம் எம்.பியான கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான நவாஸ்கனி பேசியதாவது:

 கடந்த 26 ஆம் தேதி எனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து ,இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இவர்கள் செல்வராஜ், நம்புவேல், செல்வராசு, மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆவர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களின் மீன்பிடி படகுகளையும் இதர உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அவற்றை அழித்து விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இதன்மூலமாக அந்த மீனவர்களின் அடிப்படை வாழ்வு ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் பொழுதெல்லாம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சித்திரவதை செய்வதும், துன்புறுத்துவதும், அந்த மீனவர்களின் படகுகளை உடைத்து நொறுக்குவதும் தொடர்ந்து பல்லாண்டு காலமாக அரங்கேறி வருகின்றன.

கச்சத்தீவு பிரச்சினை முழுமையான தீர்வுக்கு வராத நிலையில், மீன் பிடிக்கக் கூடிய உரிமையை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இந்திய மீனவர்கள் துயருற்று வருகின்றனர். எனவே கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான முயற்சியில் இந்திய அரசு முனைப்பாக ஈடுபட வேண்டும். கச்சத்தீவு பகுதி ராமநாதபுரம் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதை ஆவணங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

எனவேதான் 1974 ஆம் ஆண்டு வரையிலும் கச்சத்தீவு இந்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருந்தது. இந்திய அரசியல் சாசனத்தின் விதிமுறைகளை முறைப்படித் திருத்தி அமைப்பதன் மூலம் தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து இருக்க முடியும்.

ஆனால் இத்தகைய நடைமுறை எதுவும் நிகழவே இல்லை. எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டு நாம் தக்கவைப்பதற்கான வழிகள் தெளிவாகவே இருக்கின்றன. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் உடனே இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்டு, இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டும். மீன்பிடி படகுகள் மற்றும் இதர உடைமைகளை இலங்கை கடற்படையினரிடம் இருந்து மீட்கப்பட வேண்டும்.

கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இத்தகைய துன்பங்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். அவற்றில் இருந்து அவர்களை மீட்பதற்கு ஏற்ற வகையில் உரிய புதிய உபாயங்களை இந்திய அரசு கண்டுபிடித்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

இவாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x