Published : 01 Jul 2019 09:44 PM
Last Updated : 01 Jul 2019 09:44 PM
ஹைட்ரோகார்பன் பெயரில் தமிழகத்தின் டெல்டா பகுதியை மத்திய அரசு சீரழிக்க முயல்வதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதன் மீது ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்த அக்கட்சியின் அவைத்தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் ஆவேசமாகப் பேசினார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் பேசியதாவது:
''காவிரி டெல்டா விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்கள் வெயில், மழை என்று பாராமல் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழகத்தின் பல தலைவர்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். நான் பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு நேரடியாக ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் எண்ணெய் இருப்பதாகக் கிணறுகளைத் தோண்டும் நீங்கள், அதற்கு முன்பாக அம்மண்ணைப் பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்டினீர்களா? டெல்டாவின் நிதி தொடர்பான தரவுகள், டெல்டாவின் சமூகப் பொருளாதாரத் தரவுகள் உங்களிடம் இருக்கிறதா?
கடந்த 50 வருடமாக காவிரிப் படுகையில் டெல்டா பகுதியில் எண்ணெய் வளம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அரசு எந்த வித தரவுகளையும் கருத்தில் கொள்ளாமல் இப்படி டெல்டாவில் 341 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்காக எப்படி துளைக்கிறீர்கள்.?
மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு மாறானது மட்டுமல்ல, சட்ட விரோதமான செயலும் கூட. இதைத் தடுத்து நிறுத்த, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் மக்களைத் திரட்டி மத்திய அரசை எதிர்த்து கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம்''.
இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
கனிமொழி சந்திப்பை நினைவுகூர்ந்த அமைச்சர்
இதற்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, ''டெல்டாவில் நடைபெறும் அனைத்துப் பணிகளும் இப்போதுதான் நடப்பது போல கருதக் கூடாது. இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வு.
இதுபற்றி தமிழ்நாட்டில் ஒரு பகுதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பதை அறிவேன். என் சகோதரி கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே விவசாயிகளைக் கொண்ட குழுவினரை அழைத்துக் கொண்டு என்னை சந்தித்தார்'' எனத் தெரிவித்தார்.
ஹைட்ரோகார்பன் மீது விவாதிக்க அழைப்பு
தொடர்ந்து பேசிய அமைச்சர் பிரதான், ''இது ஒரு தொடர் நிகழ்வு. காவிரிப் படுகையில் எண்ணெய் எடுக்கும் விவகாரத்தில் நீங்களும் (திமுக) தமிழக அரசும் ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கிறீர்கள். மத்திய அரசு யார் மீதும் எதையும் திணிக்காது. தமிழகத்தின் மூத்த தலைவர்கள் வாருங்கள். இதுபற்றி விவாதிப்போம்” எனப் பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT