Published : 10 Jul 2019 10:12 AM
Last Updated : 10 Jul 2019 10:12 AM
செப்டம்பர் 1-ம் தேதி முதல் பயனாளிகளுக்கான மாத உதவித்தொகை அவரவர் வீடுகளுக்கு வந்து விநியோகம் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி தனது சொந்த மாவட்டமான கடப்பாவில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், ஜம்முலமொடுகு பகுதியில் ‘விவசாய திருவிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இனி மாத உதவித்தொகைக்காக யாருக்கும் லஞ்சம் வழங்க வேண்டியதில்லை. பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை இனி அவர்களின் வீடுகளுக்கே வந்து சேரும். செப்டம்பர் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ‘கிராம செயலகம்’ அமைக்கப்படும். 50 வீடுகளுக்கு ஒரு கிராம தன்னார்வலர் நியமனம் செய்யப்படுவார். இதன் மூலம் ஜாதி, மதம், கட்சி பேதமின்றி அரசுத் திட்டங்கள் முழுமையாக பயனாளிகளுக்கு போய் சேரும். இது விவசாயிகளின் அரசு. ஆதலால் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் வங்கிக் கடன் வழங்கப்படும். ஆந்திர மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் 84 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடப்பாவில் மட்டும் 37 நாட்களில் ரூ.1000 கோடி கடன் வழங்கப்பட உள்ளது.
விவசாயத்திற்கு பகலில் 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக உடனடியாக ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கான காப்பீடு சந்தா தொகையை அரசே செலுத்தும். விவசாயிகள் உபயோகிக்கும் டிராக்டர்களுக்கு சாலை வரியை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இயற்கை பேரிடர் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு வழங்க 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இது விவசாயிகளின் அரசு.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT