Published : 07 Jul 2019 12:00 AM
Last Updated : 07 Jul 2019 12:00 AM
உத்தரபிரதேசத்தில், உளவு சொல்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரியாக ஐபிஎஸ் தேவ் ரஞ்சன் வர்மா பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவர் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். திருடுபோன இருசக்கர வாகனம் குறித்து உளவு சொல்பவர்களுக்கு ரூ.1,000-ம், கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பற்றி உளவு சொல்பவர்களுக்கு ரூ.5,000-ம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். குற்றங்களின் தன்மைக்கு ஏற்றபடி பரிசு தொகையை உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளார். இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள், காவல் துறைக்கு உளவு சொல்லி வருகின்றனர். இதன் காரணமாக பல்ராம்பூரில் திருட்டு, கிரிமினல் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தேவ் ரஞ்சன் வர்மா கூறும்போது, ‘பொதுவாக குற்றங்கள் குறித்த தகவல்களை திருடர்கள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகளிடம் இருந்து பெறுவது வழக்கம். இதை பொதுமக்களிடம் இருந்தே பெற்றால் என்ன என்று யோசித்தபோது இந்த திட்டம் உருவானது. தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன் அவர்களை வழக்கிலும் சேர்ப்பதில்லை’ என்று தெரிவித்தார்.
அதிகாரி வர்மாவின் வித்தியாசமான திட்டம் குறித்த அறிவிப்பு நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன. இதில், வர்மாவின் அரசு மொபைல் எண் அச்சிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக அவரிடமே ரகசிய தகவல்களை அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சுவரொட்டி அறிவிப்பின் தலைப்பில் ‘வீட்டில் இருந்தபடி சம்பாதிக்க வாய்ப்பு’ என குறிப்பிடப்பட்டிருப்பது பலரையும் கவர்ந்து இழுக்கிறது. உளவுக்காக ஒதுக்கப்படும் ரகசிய நிதியில் இருந்து பொதுமக்களுக்கு பரிசு தொகை வழங்கப்படுகிறது. நாடு முழுவதிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில போலீஸாருக்கு ஒதுக்கப்படும் இந்த வகை நிதிக்கு கணக்கு அளிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே, இதை வித்தியாசமான முயற்சியில் பயன்படுத்தும் அதிகாரி வர்மாவுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் 'உளவு சொல்பவர்களுக்கு பரிசு' திட்டத்தை போலீசார் பொதுமக்கள் நிறைந்த ஒரு பகுதியில் மைக் மூலம் அறிவிக்கும் காட்சி
பல்ராம்பூரை சேர்ந்த ஒருவர், ரூ.75,000 திருட்டு வழக்குக்கு காவல் துறைக்கு தகவல் அளித்து ரூ.20,000 பரிசு தொகையைப் பெற்றுள்ளார். மற்றொருவர், ரூ.17 லட்சம் மதிப்புள்ள திருட்டு குறித்து தகவல் அளித்து ரூ.10,000 பரிசு தொகையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் மெயின்புரி மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரியாக இருந்த வர்மா, நாள்தோறும் இரவில் ரோந்து பணியை மேற்கொண்டார். அவரை பின்பற்றி வர்மாவின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளும், ஆய்வாளர்களும் இரவில் ரோந்து சென்றனர். இதனால் மெயின்புரியில் கிரிமினல் குற்றங்கள் வெகுவாகக் குறைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT