Published : 01 Nov 2014 10:21 AM
Last Updated : 01 Nov 2014 10:21 AM
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள சக்தி ஸ்தலத்தில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந் நிலையில் இந்திரா நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இங்கு மலரஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, வீரப்ப மொய்லி, சுஷில் குமார் ஷிண்டே, அகமது படேல், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் சக்தி ஸ்தலத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்திரா காந்தியின் சொற்பொழிவு களும் ஒலிபரப்பப்பட்டன. காங் கிரஸ் கட்சி சார்பில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்திரா காந்தி 30 ஆண்டு களுக்கு முன் தனது வீட்டில் பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நினை விடமாக மாற்றப்பட்டுள்ள இந்த வீட்டிலும் நேற்று நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
மோடி புறக்கணிப்பு
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்திரா காந்தி நினைவு நாளில் சக்தி ஸ்தலம் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்தார்.
சர்தார் வல்லபாய் படேலின் 139-வது பிறந்த நாளையொட்டி ஒற்றுமை ஓட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவரது நினைவை போற்றுவதில் நாட்டு மக்களுடன் நானும் பங்கேற்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்
இதனிடையே ஸ்பெயின் சென்றுள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்திராவுக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது டிவிட்டர் செய்தியில், “30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தனது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார். இந்த நாள் என்றென்றும் நினைவு கூரப்படும்” என்று கூறியுள்ளார்.
படேல் பிறந்த நாள் விழா
இதனிடையே படேல் பிறந்த நாள் விழாவில் பேசிய மோடி, இந்த நாள் இந்திரா காந்தியின் நினைவு நாள் என்று நினைவுகூர்ந்தார். இந்திரா படுகொலைக்குப் பின் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தையும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
விழாவில் மோடி பேசும்போது, “நாட்டின் ஒற்றுமைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் படேல். அவரது பிறந்த நாளில் 30 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டு மக்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது. இது குறிப்பிட்ட சமூகத்தினரின் மனத்தை மட்டும் காயப்படுத்த வில்லை. பல நூற்றாண்டு கால இந்தியாவின் ஒற்றுமைக்கான அச்சுறுத்தலாக உள்ளது.
படேல் தனது அரசியல் வாழ்க்கையில் தடைகளை சந்தித்தாலும் தேசிய ஒற்றுமை என்ற தொலைநோக்குப் பார்வையில் இருந்து அவர் ஒருபோதும் விலகிச் சென்றதில்லை.
விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த தண்டி யாத்திரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தப் போராட்டத்துக்கான திட்டமிடுதலை படேலிடம் ஒப்படைத்தார் காந்தி. இதனை வெற்றிகரமாக நிறைவேற்றினார் படேல்.
ராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி நாம் படிக்கும்போது, விவேகானந்தரை அறியாவிட்டால் அந்தப் படிப்பு முழுமை அடையாது. அதுபோலவே சர்தார் படேல் இல்லாத, காந்தியை பற்றிய படிப்பு முழுமை பெறாது.
சில நூற்றாண்டுகளுக்கு முன், சிறிய சமஸ்தானங்களை ஒன்றுசேர்த்து வலுவான நாட்டை உருவாக்கும் முயற்சியில் சாணக்கியர் வெற்றி கண்டார். நாடு சுதந்திரம் அடைந்த பின் அதே மிகப்பெரும் பணியை செய்தவரின் பிறந்த நாளை இப்போது நாம் கொண்டாடுகிறோம்” என்றார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT