Published : 09 Jul 2019 07:53 PM
Last Updated : 09 Jul 2019 07:53 PM
டெல்லி அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பசுமை கழிவறைகளை தர்மபுரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அத்தொகுதியின் திமுக எம்பி.பியான டாக்டர்.செந்தில்குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார்.
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் அதன் அரசு பள்ளிகளில் உள்ள பசுமை கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார முறையில் அமைந்த இந்த கழிவறைகள் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இதைப்பற்றி கேள்விப்பட்ட தர்மபுரி தொகுதியின் திமுக எம்.பியான டாக்டர்.செந்தில்குமார் அவற்றை போல் தம் தொகுதி அரசு பள்ளிகளிலும் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதனால், அது பற்றி யோசனை பெற டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் இன்று காலை செந்தில்குமார் எம்.பி சந்தித்தார்.
இந்த சந்திப்பை அடுத்து முதல்வர் கேஜ்ரிவால், நாளை டெல்லி அரசு பள்ளிகளுக்கு செந்தில்குமார் எம்.பியை அழைத்து செல்ல தம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேரில் சென்று பார்த்த பின் தம் தொகுதி மேம்பாட்டு நிதியில் செந்தில்குமார் எம்பி, பசுமை கழிவறைகளை தர்மபுரியில் அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை இணையத்திடம் செந்தில்குமார் எம்.பி கூறும்போது, ‘எனது தொகுதியின் அரசு பள்ளிகளில் சுகாதாரமான கழிவறை இல்லாத காரணத்திற்காகவே பல குழந்தைகள் அங்கு செல்ல விரும்புவதில்லை. பெரிய பிரச்சனையாக வளர்ந்து விட்டதை முடிவிற்கு கொண்டுவருவதாக நான் எனது தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளித்திருந்தேன்.’ எனத் தெரிவித்தார்.
முதன்முறை எம்,பியான செந்தில்குமாரின் வெற்றி மக்களவை தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதற்கு அவர் பாமக வேட்பாளர் டாக்டர்.அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றி பெற்றது காரணம் ஆகும்.
ஸ்டாலினுக்கு கேஜ்ரிவால் வாழ்த்து
திமுக தலைமையிலான கூட்டணி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 39 தொகுதிகளில் 38 பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறும்படியும் முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார். விரைவில் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறவிருப்பதாகவும் திமுக எம்.பி செந்திலிடம் கேஜ்ரிவால் தகவல் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT