Published : 01 Jul 2019 03:17 PM
Last Updated : 01 Jul 2019 03:17 PM
மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் இன்று மக்களவையில் வலியுறுத்தி பேசினார்.
இதுகுறித்து இன்று மக்களவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் உறுப்பினரான சு.வெங்கடேசன் பேசியதாவது:
மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இந்த அவையை நான் கேட்டுக் கொள்கின்றேன். மதுரை வெறும் நகரமல்ல, அது தமிழ்ப்பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரீகத்தின் தாயகம். உலகில் 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு இன்றைக்கும் வாழும் நகரமாக இருப்பது மதுரை.
சமீபத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை மதுரைக்கு அருகில் கீழடியிலே நிகழ்த்திய அகழாய்வில் 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எண்ணற்ற பொருட்களும் தொல்பழம் நாகரீகத்தின் சான்றுகளும் கிடைத்திருக்கிறது.
சுமார் அதில் 15000 மேற்பட்ட தொல்பொருட்கள் இந்த நாகரீகத்தின் சான்றை இன்றைக்கு உலகத்திற்கு முன்பு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. உலகில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்கள் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 12 இடங்களில் கிடைக்கிற ஒரே உலகநகரமாக மதுரை அமைந்துள்ளது.
இந்த நகரம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனிதகுல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பையும் செலுத்திய நகரமாகும் எனவே மதுரையை உலக பராம்பரிய நகரமாக - வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT