Last Updated : 04 Nov, 2014 10:31 AM

 

Published : 04 Nov 2014 10:31 AM
Last Updated : 04 Nov 2014 10:31 AM

கர்நாடகத்தைப் பிளவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது: முதல்வர் சித்தராமையா பேச்சு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் பெயரை ‘பெலகாவி' என மாற்றியது தொடர்பாகவும், எல்லையில் அமைந்திருக்கும் 814 கிராமங்களுக்கு மகாராஷ்டிரம் உரிமை கோருவது தொடர்பாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, சட்ட நிபுணர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள பெல்காம் மாவட்டத்தின் பெயர், கடந்த 1-ம் தேதி பெலகாவி என மாற்றப்பட்டது. இதனைக் கண்டிக்கும் வகையில் கர்நாடக மாநில உதய தினத்தை பெலகாவியில் மகாராஷ்டிர ஏகி கிரண் கட்சி கருப்பு தினமாக அனுசரித்தது.

மேலும் பெலகாவி மாவட்டத்தில் மராட்டிய‌ர்கள் பெரும்பான்மையினராக வாழ்வதால், அதனை மகாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன‌. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெலகாவி மாவட்ட எல்லை பிரச்சினை குறித்து திங்கள்கிழமை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா,உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது கட‌ந்த 60 ஆண்டுகளாக பெலகாவியில் மராட்டியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் குறித்தும், பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என கோருவது குறித்தும் ஆலோசித்தனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 'பெலகாவி' பெயர் மாற்றம் தொடர்பான வழக்கு குறித்தும் விவாதித்தனர். மகாராஷ்டிரா மாநில எல்லையில் அமைந்துள்ள 814 கிராமங்களை மஹாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என அம்மாநில அரசு தொடுத்துள்ள வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பிரிவினை கூடாது

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மத்திய அரசின் ஒப்புதலுடன் பெல்காமின் பெயர் பெலகாவி என மாற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பெலகாவியில் உள்ள மராட்டிய கட்சிகள் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். மகாராஷ்டிராவில் உள்ள சில அரசியல் கட்சிகள் இத்தகைய செயலை ஊக்குவித்து வருவதை ஏற்க முடியாது. இதே போல பெலகாவி புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறுவதை ஏற்க முடியாது. வளர்ச்சி என்ற பெயரில் கர்நாடக மாநில‌த்தை கூறுபோடுவதை ஏற்க மாட்டோம்.

சில இடங்களில் தனி மாநில கோரிக்கை எழுந்து வருவதையும் கண்டிக்கிறேன். மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருக்கும் 814 கிராமங்களும் கர்நாடகத்திலே தொடர்வது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் கர்நாடக மாநில‌த்தைப் பிளவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது. கர்நாடகத்தில் வாழும் அனைத்து மொழியினரும் சகோதரர்களாக வாழ வேண்டும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x