Published : 25 Aug 2017 08:43 AM
Last Updated : 25 Aug 2017 08:43 AM

ஆதார் தொடர்பான வழக்கில் நீதிபதிகளின் கருத்துகள்

ஆதார் தொடர்பான வழக்கில் தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையா என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இதில் நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல், மூத்த வழக்கறிஞர்கள் கூறிய முக்கிய கருத்துகள் வருமாறு:

தலைமை நீதிபதி கேஹர்

தனிநபர் அந்தரங்க தகவல்கள் தவறாகப் பயன்படுத்தபடக்கூடும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பொது அரங்கில் தனிநபரின் தகவல்கள் வெளியாவது அவர்களை பாதிக்கும்.

நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

ஒரு மனிதன் சுயமரியாதையுடன் மரணத்தைச் சந்திக்க வேண்டும் என்றால் அவனது அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீதிபதி ரோஹிங்டன் நாரிமன்

அநீதிகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். அந்த சட்டங்கள் நிகழ்காலத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானம் 1948-ல் இந்தியாவும் இணைந்துள்ளது. அதன்படி அந்தரங்க ரகசியம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.

நீதிபதி சந்திரசூட்

நான் தனிமையை விரும்பினால், தனித்திருக்கிறேன். இது மனித வாழ்க்கையின் அடிப்படை உரிமையாகும். தனிநபர் அந்தரங்க உரிமை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று அரசு கூறுவது தவறு. பெண்களிடம் கர்ப்ப பை புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதற்காக கர்ப்ப பையை அகற்றுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட முடியுமா?

நீதிபதி சலமேஸ்வர்

குடியரசு நாட்டில் தனிநபர் அந்தரங்கம், அடிப்படை உரிமை இல்லை என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. பல்வேறு தீர்ப்புகளில் தனிநபர் அந்தரங்கம், அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ளது. அவற்றை நிராகரிக்க முடியாது.

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்

அந்தரங்க உரிமை என்பது ஒன்றை மட்டுமே குறிப்பது அல்ல. அது பல்வேறு உரிமைகள் சார்ந்தது. அந்த உரிமைகள் அரசமைப்பு சாசனம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. தனிமனித அந்தரங்க தகவல்கள் அனைத்தும் அடிப்படை உரிமை அல்ல. தங்களின் அந்தரங்க உரிமை பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டி ஆதாருக்கு எதிராக சிலர் குரல் எழுப்புகின்றனர். ஆதார் அடிப்படையிலான திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான ஏழைகள் பலன் அடைந்து வருகின்றனர். ஒரு சிலருக்காக பெரும்பாலான மக்களின் நலன்களை புறந்தள்ள முடியாது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா

எனது விரல் ரேகைகளில் என்ன அந்தரங்கம் இருக்கிறது. நான் ஒரு கோப்பை தொட்டால் அதில் எனது ரேகை பதிவாகிறது. மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். சுமார் 115.15 கோடி மக்கள் அதாவது 98 சதவீத மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் அந்தரங்கத்தை அடிப்படை உரிமையாக சட்டத்தில் சேர்க்கக்கூடாது. ஆதார் தகவல்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வழக்கறிஞர் ராகேஷ் திவேதி (குஜராத் அரசின் வழக்கறிஞர்)

இன்றைய உலகில் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தனிநபர் தொடர்பான பொதுவான விவரங்களை அந்தரங்க உரிமையின் கீழ் கொண்டு வரக்கூடாது.

வழக்கறிஞர் சுந்தரம் (மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞர்)

அந்தரங்கம் என்பது தனிநபர் உரிமை அல்ல. இது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபடுகிறது. இதனை தனிநபர் உரிமையாக ஏற்றால் நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்துவிடும்.

வழக்கறிஞர் கபில் சிபல்

அந்தரங்க ரகசியம் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். மக்களின் விருப்பத்தின்பேரில் அவர்களின் அந்தரங்க தகவல்களைப் பெறலாம். அவர்களை கட்டாயப்படுத்தி பெறக்கூடாது. தனிநபர் அந்தரங்கத்தை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

வழக்கறிஞர் ஷியாம் திவான் (மனுதாரர்களின் வழக்கறிஞர்)

தனிநபர் அந்தரங்கம், மக்களின் அடிப்படை உரிமை. பொதுமக்கள் தானாக முன்வந்து தகவல்களை அளிக்கலாம். அவர்களை கட்டாயப்படுத்துவது தவறு.

வழக்கறிஞர் சாஜன் (மனுதாரர்களின் வழக்கறிஞர்)

ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்து எல்லோருக்கும் அளித்தால் அந்த நிறுவனம் மீது என்னால் வழக்கு தொடர முடியும். ஆனால் அதை இப்போது அரசே செய்கிறது. இதை சட்டவிதிகளால் தடுக்க முடியாதா?

கோபால் சுப்ரமணியன்

(மனுதாரர்களின் வழக்கறிஞர்)

அந்தரங்க தகவல்கள், மக்களின் அடிப்படை உரிமையாகும். அதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x