Published : 08 Aug 2017 09:35 AM
Last Updated : 08 Aug 2017 09:35 AM
மு
தலிலேயே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், அத்துடன் கருணை மனுவுக்கோ, முன் ஜாமீனுக்கோ கூட தயார் செய்துகொள்கிறேன். என்னையும் என் குடும்பத்தையும் அறிந்தவர்கள் வீட்டில் பூனைகள், நாய்களைத்தான் நாங்கள் மிகவும் பூசிக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வார்கள். வாழ்க்கையின் சில பாடங்களைக் கடந்த ஆண்டுகளில் இவை எங்களுக்கு உணர்த்தி வந்துள்ளன.
இவற்றின் செயல்களிலிருந்தும் சிலவற்றை எனது கட்டுரைகளில் காட்ட முடியும். சிக்கிம் எல்லையில் நிலவும் பதற்றத்தையும் என்னுடைய தொழிலின் (இதழியல்) தன்மையையும் விளக்க, நாங்கள் வளர்த்த முதல் மூன்று நாய்களின் செயலை உதாரணமாகக் கூற விழைகிறேன். சிக்கிம் எல்லைப் பதற்றமானது மோடி அரசு ராணுவரீதியாகச் சந்திக்கும் முதல் நெருக்கடியாகும்.
1980-களின் தொடக்கத்தில் ஷில்லாங்கில் அசாமிய பாணி காட்டேஜ் ஒன்றில் வசித்தோம். எங்களுடைய மூன்று நாய்கள் வீட்டின் முன் உள்ள தோட்டத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும். அந்தப் பக்கம் யாராவது மனிதரோ, பிராணியோ வந்தால் குலைநடுங்கும்படி மூன்றும் குலைக்கும். ஒரு நாள் பிற்பகலில் பக்கத்து வீட்டுக்காரரின் கோழிக் கூண்டின் கதவு திறந்துகொண்டதால் அதிலிருந்து சில சேவல்கள் வெளியேறி எங்களுடைய வீட்டுக்குள் வந்துவிட்டன.
மூன்று நாய்களும் அவற்றைப் பார்த்துக் குலைக்காமல் இருந்தன. “அதோ பார் சேவல்கள், போய் விரட்டு – குரை” என்று உசுப்பேற்றியும் கூட சும்மாவே இருந்தன. தன்னுடைய பாதுகாப்புக்கு எது நல்லது என்று நாய்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்பது புரிந்திருக்கும். நம்முடைய ‘நாட்டுப்பற்று மிக்க சேனல்கள்’ ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் இந்நாட்டின் உள்நாட்டு - வெளிநாட்டு எதிரிகள், உண்மையான – கற்பனையான எதிரிகள் ஆகியோருக்கு எதிராகக் கூச்சலிட்டு ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றன. பாகிஸ்தானைத் தினந்தோறும் கண்டிக்க அவை தவறுவதே இல்லை. டோக்லாம் பகுதியில் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தை கண்டுகொள்ளாமல் விடுகின்றன. சீனாவின் மீதுள்ள அச்சத்தால் அப்படிச் செய்வதில்லை. அரசுத் தரப்பிலிருந்து வந்த கட்டளை அல்லது வேண்டுகோளை அடுத்தே அதைப்பற்றிப் பேசாமலிருக்கின்றன.
இது உண்மையாக இருந்தால் சீனா குறித்து இந்திய அரசு உள்ளுக்குள் அஞ்சுகிறது என்றாகிறது. பாகிஸ்தானைத் தாக்கிப் பேசுவதில் அதற்குத் தயக்கமில்லை என்றாகிறது..
இதைப் பார்க்கும் சீனா, இந்திய அரசும் செய்தி ஊடகங்களை நம்மைப் போலவே கட்டுப்படுத்துகிறது என்று நினைக்கக்கூடும்; இந்திய அரசும் தனது கருத்தை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கிறது என்று சீனா புரிந்துகொண்டுவிடும். சீனாவையோ, பாகிஸ்தானையோ எதிர்த்துப் பேச வேண்டாம் என்று செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய அரசுக்கும் இருக்கிறது என்பதும் இதிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.
சீனா பற்றி தன்னுடைய ஊடகங்கள் ஏடாகூடமாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்ற அளவுக்கு இந்திய அரசு அஞ்சுகிறது என்ற முடிவும் இதிலிருந்து பெறப்படும். பாகிஸ்தானை, காஷ்மீரிகளை, முஸ்லிம்களை, போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் தொடர்புள்ள இறந்த அரசியல்வாதிகளைப் பற்றிக்கூட வார்த்தைகளால் வதைப்பது இன்னமும் தொடர்கிறது. டோக்லாம் விவகாரம் தொடர்பாக நேரடியாகக் கருத்து எதையும் கூறாத ஒரு செய்தி சேனல், டோக்லாம் பகுதியில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தவில்லையே ஏன் என்று கேட்டதோடு நிறுத்திக்கொண்டுவிட்டது.
சீனாவுடன் போர் செய்ய இந்தியா தயங்குகிறது என்றுகூட சிலர் கருதிவிடலாம். தன்னைவிட இளைத்தவன் என்றால் இந்தியா மிரட்டிப் பார்க்கிறது, வலுத்தவன் என்றால் எதுவுமே நடக்காததைப்போல ஒதுங்க முற்படுகிறது என்றும் சிலர் கருதலாம். வளர்ந்து வரும் புதிய வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியாவின் சர்வதேச அந்தஸ்துக்கு இது இழுக்கையே தரும்.
சீனாவின் செயல்களைத் தொடர்ந்து கவனித்து வருபவராக இருந்தால் அல்லது மாவோவின் சிந்தனைகளால் கவரப்பட்டவர்களுடன் பழகியிருந்தால் அவர்களுடைய “டா டா - டான் டான்” என்ற கொள்கை பரிச்சயமாகியிருக்கும். “போரிடு போரிடு - பேசு பேசு” என்பது இதன் பொருள். பல பத்தாண்டுகளாகவே சீனா இதைத்தான் வெளியுறவுக் கொள்கையில் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறது. இந்த சண்டைகளையும் பேச்சுகளையும் சீன அரசு ‘பீப்பிள்ஸ் டெய்லி’, ‘சின்ஹுவா’, ‘குளோபல் டைம்ஸ்’ வாயிலாகத்தான் செய்கிறது. முப்பதாண்டுக்கால சீனப் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகும் இந்த வெளியீடுகள் வாயிலாகத்தான் அரசு பேசுகிறது. இதனால்தான் சீன அரசை ஊன்றிக் கவனிப்பவர்கள் ஹாங்காங், பெய்ஜிங் மற்றும் முக்கியத் தலைநகரங்களில் இருந்துகொண்டு இந்த வெளியீடுகளின் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் படித்து சீனாவின் எண்ணத்தைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். நம்முடைய ஊடகங்கள் இப்போது பாகிஸ்தானையும் நம்முடைய முஸ்லிம் குடிமக்களையும் வசைபாடி வறுத்தெடுப்பதைப் போலவே, சீன ஊடகங்கள் இந்தியாவைக் கடுமையாகத் தாக்கி எழுதி வருகின்றன. அரசு ஊடகங்கள் கடுமையாகத் தாக்கும் அதே வேளையில், சுதந்திரமான ஊடகங்கள் என்று கருதப்படுபவை இந்தியா குறித்து மவுனம் சாதிக்கின்றன.
நம்முடைய அரசோ ‘பேசித் தீர்வு காண முடியும்’ என்கிறது. சீனாவோ, ‘துருப்புகளைத் திரும்பப் பெற்று பின் வாங்கு, அல்லது சண்டையிடு’ என்று கொக்கரிக்கிறது. இதற்கான பதிலடியை வாய் வார்த்தையாகக் கூடத் தராமலிருக்கிறோம். இந்திய தேசபக்த சேனல்களை சீனா மீது ஏவி விட வேண்டும் என்பதல்ல நம்முடைய ஆசை. அவர்களைப் பேசவிடாமல் தடுப்பதால்தான் நிலைமை கட்டு மீறாமல் இருக்கிறது. சீனாவுக்கு எதிராகக் கடைப்பிடிக்கும் இதே கட்டுப்பாட்டை, பாகிஸ்தானுக்கு எதிராகவும் கடைப்பிடித்திருந்தால் இப்போதைய மவுனத்துக்கு மரியாதை ஏற்பட்டிருக்கும்.
அவசரப்பட்டு செயலில் இறங்க சீனா விரும்பவில்லை. இது 1962 அல்ல என்று அவர்களுக்கும் தெரியும். இந்தியாவுக்கு எதிராக முதல் தோட்டாவைச் சுட்டால் ஆஸ்திரேலியா முதல் ஜப்பான் வரை மற்றும் மேற்கில் உள்ள அனைத்து நாடுகளும் ஓரணியில் திரண்டுவிடும். சீனாவின் ராணுவ நடவடிக்கைகளால் இந்த நாடுகள் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று ஏற்கெனவே அஞ்சிக்கொண்டிருக்கின்றன. இப்படி இந்தியாவுடன் பல நாடுகள் சேருவதை சீனா விரும்பாது. கட்டாயப்படுத்தி காரியத்தை சாதிக்கும் நெருக்கடி பாணி ராஜதந்திரத்தைச் சீனா கடைபிடிக்கிறது. இதற்கு அரசு ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் சீனாவின் செயல்களைக் காணாதது போல ஒதுக்குவது நன்மையைத் தராது. இருதரப்பும் பேசி, டோக்லாம் பிரச்சினைக்கு கண்ணியமான, சமாதானத் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ்
முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT