Published : 06 Aug 2017 12:27 PM
Last Updated : 06 Aug 2017 12:27 PM

திருப்பதி அருகே நேரிட்ட சாலை விபத்தில் 4 ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் உட்பட 5 பேர் பலி

திருப்பதி அடுத்துள்ள மதனபள்ளி அருகே ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற மினி வேனும், லாரியும் நேற்று நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் 4 ஸ்பெயின் நாட்டினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 9 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்து, இங்கு கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவினர். இதன் மூலம் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் மிகவும் பின் தங்கிய கிராமங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி இவர்கள் 9 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபூருக்கு சென்று அங்கு மிகவும் பின் தங்கிய வறட்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அதன்பின்னர், மினி வேனில் சித்தூர் மாவட்டம் வழியாக புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தனர்.

சித்தூர் மாவட்டம், மதனபள்ளி-புங்கனூர் நெடுஞ்சாலையில் யாதலவங்கா அருகே நேற்று காலை வந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி, மினி வேன் மீது மோதியது. இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மோரன் மொலிநில்லோ (65), கல்லே டபாரெஸ் (51), மரியா நீவிஸ் (63), ஃபிரன்ஸிஸ்கோ (31) மற்றும் மினி வேனின் ஓட்டுநர் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேனில் பயணம் செய்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மதனபள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மதனபள்ளி போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு விசாரணை

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த தகவல் அறிந்ததும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னாவிடம் தொலைபேசி மூலம் விசாரித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் ஸ்பெயின் நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா விபத்து நேரிட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x