Published : 27 Aug 2017 04:00 PM
Last Updated : 27 Aug 2017 04:00 PM

கள்ளுக்கடைக்கு அருகில் மதுக்கடை: இரட்டிப்பு பாதிப்பில் பொங்கும் கேரள மக்கள்  

 

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகே செயல்பட்ட மதுக்கடைகள் நாடு முழுக்க மூடப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் போலவே கேரளத்தில் 'கேரளா ஸ்டேட் பீவேரஜ் லிமிடெட்' (KERALA STATE BEVERAGES CORPORATION LTD) மூலம் மதுவிற்பனை நடந்து வருகிறது.

புதிய உத்தரவின் மூலம் ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடப்பட்டு அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் நெடுஞ்சாலையோர கள்ளுக்கடைகளும் மூடப்பட்டு அதற்கும் மாற்று இடம் தேடப்பட்டு வந்தன. இவற்றில் நெடுஞ்சாலை அல்லாத இடத்தில் இருக்கும் கள்ளுக்கடைக்கு அருகிலேயே அதிகாரிகள் மதுக்கடையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் இரட்டிப்பு பாதிப்பை மக்கள் சந்திப்பதால் அதற்கேற்ற போராட்டங்களும் வலுக்க ஆரம்பித்துள்ளது.

உதாரணமாக பாலக்காடு ஜில்லா புதுச்சேரி பஞ்சாயத்துக்குட்பட்ட கானல் பிரிவிலிருந்து கோங்காம்பாறை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் நீண்டகாலமாக ஒரு கள்ளுக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கிருந்து அரை கிலோ மீட்டர் முன்னதாக ஒரு மதுக்கடையும் கடந்த 16-ம் தேதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் உணர்ச்சி பொங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரவீன், முகேஷ் ஆகியோர் கூறுகையில், ''இங்கே ஒரு உயர்நிலைப் பள்ளியும், 4 அங்கன்வாடிகளும் இருக்கு. மயானம் ஒண்ணு இருக்கு. பாலக்காடு வரைக்கும் போற குழந்தைகள், பெண்கள் நடந்தேதான் 4 கிலோமீட்டர் தூரம் மெயின்ரோடு போய் பஸ் ஏறணும். ஆட்டோவுக்கு ரூ.80, ரூ.100 கொடுக்கிற வசதி பெரிசா யாருக்கும் இல்லை. ஏற்கெனவே இங்கே கள்ளுக்கடை இருக்கு. அதனாலும் பிரச்சினைதான்.

அப்படியிருக்க இந்த மதுக்கடையை 16-ம் தேதி ராத்திரியோட ராத்திரியாக போலீஸ் பாதுகாப்போட கொண்டு வந்து வச்சிருக்காங்க. இந்தக்கடைய இந்த பஞ்சாயத்துல 3 இடங்களில் வைக்க முயற்சி செஞ்சாங்க. மக்கள் விரட்டியடிச்சுட்டாங்க. இங்கே கடை வர்றதா சொன்னப்பவே நாங்க எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்படியெல்லாம் கொண்டு வரமாட்டோம்னு ஒரு மாசமா சொல்லீட்டே இப்ப கொண்டு வந்திருக்காங்க. எனவேதான் இந்தப் போராட்டம். ஜனகிய சமரம்சமதிங்கிற பேரால பொதுமக்களாவே ஒண்ணு சேர்ந்து நடத்தறோம். கடையை அகற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம்!' என்றனர்.

போராட்டத்தில் திரண்டிருந்த பெண்களில் மீனா என்பவர் கூறுகையில், ''இப்ப மதுக்கடை உள்ள இடத்துக்கு பின்னாடி ஆறு இருக்கு. அதையொட்டி வெறும் புதர்மயம்தான். இந்த அட்டப்பள்ளத்துல போன வருஷம் 12 வயசு மற்றும் 8 வயசு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்காங்க. இப்ப பீதியில், கூடுதல் பீதியை ஏற்படுத்தற விதமா மதுக்கடையை வைக்கிறாங்க. ஏற்கெனவே கள்ளு குடிச்சுட்டு இருக்கறவங்க, இனிமே பக்கத்துலயே ஈஸியா பிராந்தியையும் வாங்கி குடிப்பாங்க. அப்ப குடும்பம், குடும்பமாவா இருக்கும்!'' என்று ஆவேசப்பட்டார்.

இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும் அங்கே இருந்த மதுக்கடை போலீஸ் பாதுகாப்புடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது. இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளுக்கடைக்காரர்களிடம் இது பற்றி கேட்டபோது, ''அவர்கள் பிராந்திக் கடை வைப்பதால் எங்கள் கள்ளுவியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படும்தான். அது அரசாங்க முடிவு. நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x