Published : 28 Aug 2017 03:28 PM
Last Updated : 28 Aug 2017 03:28 PM
டெல்லி மாநில பாவனா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தொகுதியைத் தன்வசம் தக்கவைத்துள்ளது.
இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் தனது பதவியைத் துறந்துவிட்டு பாஜக-வில் இணைந்ததையடுத்து பாவனா தொகுதியில் காலியிடம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி இடைத்தேர்தலில் பாஜக-வை வீழ்த்தி அதே தொகுதியைத் தன் வசம் தக்கவைத்துள்ளது.
இம்முறை ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்தர் 59,886 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், இவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் வேத் பிரகாஷ் 35,834 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார், காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர குமார் 31,919 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.
ஆம் ஆத்மி கட்சியில் நின்று வெற்றி பெற்று அதனை தூக்கி எறிந்து பாஜகவில் இணைந்த வேத் பிரகாஷுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் டெல்லி பாவனா தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இதே பாவனா தொகுதிக்கு 2013 வரை மூன்று முறை காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரஜவ்ரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று டெல்லி சட்டப்பேரவையில் தன் கணக்கை 4-ஆக அதிகரித்துக் கொண்டது. தற்போது பாவனா வெற்றி மூலம் ஆம் ஆத்மி தன் கணக்கை 66 என்று மீண்டும் வந்தடைந்தது.
சுமார் 2.94 லட்சம் வாக்காளர்களுடன் டெல்லி மாநிலத்தின் மிகப்பெரிய தொகுதியாக விளங்குகிறது பாவனா. ஆகஸ்ட் 23-ம் தேதி இடைத்தேர்தலில் 45% வாக்குப் பதிவு நடைபெற்றது. 2015 தேர்தலில் பாவனாவில் 61.83% வாக்குப்பதிவு நடைபெற்றது. 2015-ல் ஆம் ஆத்மி கட்சி பாவனா தொகுதியில் 50,557 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT