Published : 25 Aug 2017 12:15 PM
Last Updated : 25 Aug 2017 12:15 PM
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி 11 நாடுகளுக்கு, 3 ஆயிரம் டன்களுக்கு மேல் கடத்திய சென்னையைச் சேர்ந்த மொய்தீனை கடப்பா போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் இவரிடமிருந்து 68 செம்மரக் கட்டைகள், விலை உயர்ந்த கார்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாபுஜி அட்டாடா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்தவர் மொய்தீன். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். அப்போது இவரது கடைக்கு வரும் சாகுல் பாய் என்ற செம்மர கடத்தல்காரருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மொய்தீனும் சாகுல் பாய்க்கு நம்பிக்கையாக இருந்து சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சென்னைக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் இவர் படிப்படியாக சம்பாதிக்கத் தொடங்கினார். பின்னர் இவர்களுக்கு பிரபல செம்மர கடத்தல்காரர் கங்கி ரெட்டியின் ஆதரவும் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் கடல் வழியாக செம்மரங்களை சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளுக்கு கடத்தினர். மொய்தீன் மட்டும் இதுவரை 3 ஆயிரம் டன்களுக்கு மேல் செம்மரம் கடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் இவர் ரூ. 77.50 கோடி சொத்துகள் சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது பெயர் ஏ.டி.மொய்தீன். இவர் பெரும் பணக்காரர் ஆனதும் இவரை இவரது நண்பர்கள் செல்லமாக ‘ஏடிஎம்’ என அழைக்கத் தொடங்கினர். விலை உயர்ந்த கார்களில்தான் மொய்தீன் வலம் வருவார். இவர் வெளிநாடுகளில் தங்கி தனது தொழிலை பார்த்து வந்தார். இப்போதுதான் முதல்முறையாக போலீஸில் சிக்கியுள்ளார். இவருடன் இவரது கூட்டாளிகள் இருவரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு கடப்பா எஸ்.பி பாபுஜி அட்டாடா கூறினார்.
மொய்தீனிடமிருந்து 68 செம்மரக் கட்டைகள், ரூ.1.23 கோடி மதிப்பிலான 2 பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் 3 வாகனங்கள், 12 வங்கிக் காசோலைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ரூ.55 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த செல்போன்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT