Published : 19 Aug 2017 04:01 PM
Last Updated : 19 Aug 2017 04:01 PM
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய ஐக்கிய ஜனதா தளம் தீர்மானம் நிறைவேற்றியது.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பாட்னாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளையில் கட்சியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சரத் யாதவ் அணியின் தனியாக இன்று கூட்டம் நடத்தினர். முன்னதாக நிதிஷ் குமார் இல்லத்தின் அருகே நிதிஷ், சரத் ஆதரவாளர்களுக்கு இடையே சச்சரவு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2013--ல் முறிந்தது 2017-ல் மலர்ந்தது..
ஐக்கிய ஜனதா தள கட்சி கடந்த 2013-ம் ஆண்டு பாஜகவுடனான உறவைத் துண்டித்தது. நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 19.08.2017-ல் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்துள்ளது.
ஜன் அதாலத் கூட்டம்:
சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அதிருப்தியாளர்கள் ஜன் அதாலத் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ் விலகியது முதலே அவரை மிகக் கடுமையாக சரத் யாதவ் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாட்னா விமான நிலையத்துக்கு வந்த சரத் யாதவை அவரது ஆதரவாளர்கள் விமரிசையாக வரவேற்றனர். நிதிஷ் குமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிஹாரின் 14 மாவட்டங்களில் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் தன்னையே ஆதரிப்பதால் தனது தலைமையிலான அணியே உண்மையான ஐஜத என சரத் யாதவ் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT