Last Updated : 15 Nov, 2014 09:29 AM

 

Published : 15 Nov 2014 09:29 AM
Last Updated : 15 Nov 2014 09:29 AM

காவல் நிலையம் செல்ல வேண்டியதில்லை: பெங்களூருவில் ரிமோட் எப்ஐஆர் திட்டம் அறிமுகம்

நாட்டில் முதல் முறையாக பெங்களூருவில், ரிமோட் எப்.ஐ.ஆர்.திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இனி, புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல வேண்டியதில்லை. நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ரிமோட் எப்.ஐ.ஆர். மையத்தில் உள்ள கேம‌ராவிடம் தெரிவித்தால், வழக்கு தானாக பதிவாகிடும்.

'ரிமோட் எஃப்.ஐ.ஆர்.' மைய‌த்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 3 இடங்களில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் சித்தரா மையா பேசியதாவது: பெங்களூருவில் அரசும் காவல் துறையும் துரிதமாக செயல்பட்ட போதும் குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை. அதிலும் பெண்கள், பள்ளி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்கள் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க தயங்கு கின்றனர்.

பல இடங்களில் போலீஸார் வழக்கு ப‌திவு செய்யாமல் பாதிக்கப் பட்டவர்களை அலைக்கழிப்பதாக புகார் வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே பெங்களூருவில் ரிமோட் எப்.ஐ.ஆர். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ''என்றார்.

வீடியோவில் பேசினால் போதும்

இதனைத் தொடர்ந்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி 'ரிமோட் எப்.ஐ.ஆர். திட்டத்தை பற்றி கூறிய‌தாவது: ஒடிஸா மாநிலத்தில் ஏடிஎம் மையம் மூலமாக 'ஐகிளிக் வீடியோ' முறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராவில் உள்ள காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீஸார் தினமும் சோதித்து,காட்சிகளை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்வார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நிறைய சிக்கல் இருக்கிறது.

பெங்களூருவில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் 'ரிமோட் எப்.ஐ.ஆர்.' மையம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.போலீஸில் புகார் தெரிவிக்க விரும்பு கிறவர்கள் இங்கு வந்து, கேமராவை பார்த்து சம்பவத்தை தெரிவித்தால் போதும்.

இந்த காட்சிகளை போலீஸ் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்க்கும் காவலர் உடனடியாக வழக்கு பதிவு செய்வார். அடுத்த 10 நிமிடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணை யின் இடையிடையே வழக்கில் நடைபெறும் அனைத்து தகவல் களும் புகார் அளித்தவருக்கு தெரிவிக்கப்படும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x