Published : 13 Aug 2017 12:14 PM
Last Updated : 13 Aug 2017 12:14 PM

தொடர் விடுமுறைகளால் திருமலையில் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறைகள் வந்ததால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமியை தரிசிக்க 14 முதல் 16 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வந்துள்ளதால் திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க 16 மணி நேரம் ஆகிறது. திவ்ய தரிசனத்திற்கு 10 மணி நேரமும், ரூ. 300 சிறப்பு கட்டண தரிசனத்திற்கு 6 முதல் 8 மணி நேரமும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் விடுமுறையால் பக்தர்கள் தொடர்ந்து திருமலைக்கு வந்த வண்ணம் இருப்பதால், திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகள் நிரம்பிவிட்டன. தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று, தலைமுடி காணிக்கை செலுத்தவும், அன்னதான சத்திரத்திலும், லட்டு பிரசாதம் பெறவும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். தொடர் விடுமுறையால், திருப்பதியில் ரயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

மலைப்பாதையில் ஆய்வு

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் சனிக்கிழமை நள்ளிரவில் தேவஸ்தான தலைமை கண்காணிப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மலையேறி செல்லும் பக்தர்களிடம் வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றித்திரிந்தால் உடனடியாக அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸாருக்கோ அல்லது கண்காணிப்பு அதிகாரிகளுக்கோ தகவல் கொடுக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x