Published : 16 Aug 2017 09:54 AM
Last Updated : 16 Aug 2017 09:54 AM

ஏழைகளின் சொந்த வீடு கனவை நனவாக்குவேன்: சுதந்திர தின விழாவில் ஆந்திர முதல்வர் உறுதி

ஏழைகளின் சொந்த வீடு கனவை நனவாக்குவதே எனது லட்சியம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார்.

ஆந்திர அரசு சார்பில் திருப்பதியில் உள்ள தாரக ராமா விளையாட்டு மைதானத்தில் நேற்று 71-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

ஒரு மாநிலம் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு தண்ணீர் மிக அவசியம். அதற்காக இந்த அரசு பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் பட்டிசீமா அணையை கட்டி முடித்து, ராயலசீமா பகுதிக்கு தண்ணீர் வழங்கியது. மேலும் ரூ.13,000 கோடி செலவில் 23 அணைக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்.

ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இலவச மருத்துவ சேவை, கர்ப்பிணிகளுக்கு பல்வேறு சலுகைகள், மானிய விலையில் காஸ் இணைப்பு, வீட்டு மனைப்பட்டா போன்றவற்றை வழங்கி வருகிறது.

நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 4.5 லட்சம் வீடுகளும், கிராமப் புறங்களில் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் 12.5 லட்சம் வீடுகளும் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்குவேன். வரும் விஜயதசமி முதல் மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் ‘அண்ணா’ கேன்டீன் தொடங்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார். பின்னர் சிறந்த சேவை புரிந்த போலீஸாருக்கு பதக்கங்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x