Published : 04 Aug 2017 10:06 AM
Last Updated : 04 Aug 2017 10:06 AM
தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, கொலை முயற்சி நடந்ததாக நாடகமாடிய முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் முகேஷ் கவுட். இவரது மகன் விக்ரம் கவுட். இவர், கடந்த 28-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அவரது வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இவரது மனைவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விக்ரமை சேர்த்தார். அங்கு இவரது உடலிலிருந்து ஒரு குண்டை மருத்துவர்கள் அகற்றினர்.
இதற்கிடையே விக்ரம் கவுட் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக கூறியதன் பேரில், அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விக்ரம் கவுட் கடன் தொல்லையாலும், தனது சட்டமன்ற தொகுதி மக்களின் அனுதாபம் பெறுவதற்காகவும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நண்பர்கள் உதவியுடன் நாடகமாடும் விஷயம் தெரிய வந்தது. இதையடுத்து விக்ரம் கவுட் நண்பர்கள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விக்ரமை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி 8 பேரும் சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் விக்ரம் கவுடுக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதாக வழக்கறிஞர் கூறியதால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT