Published : 17 May 2017 06:33 PM
Last Updated : 17 May 2017 06:33 PM

முத்தலாக் விவகாரம் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் தொடர்பானது அல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

முத்தலாக் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்துப் பெரும்பான்மை முஸ்லிம் சிறுபான்மையினரை ஆதிக்கம் செலுத்தும் விவகாரமல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உண்மையில், ஒரே மதத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலானது இந்த முத்தலாக் விவகாரம் என்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் முன்பு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிட்டார்.

“இந்த விவகாரம் நாட்டின் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான முரண் அல்ல. உண்மையான விவகாரம் முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேதான். ஒரே சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஆணாதிக்கத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆண்கள் வலுவானவர்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள், கல்வி பயின்றவர்கள், குடும்பத்தில் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். பெண்களோ பயப்படுவதற்கென்றே பிறந்தவர்கள், பலவீனமானவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள். இது முஸ்லிம்களில் வசதி படைத்தோருக்கும் ஒன்றும் இல்லாதவர்களுக்குமான போராட்டம். இது சிறுபான்மையினத்துக்குள் நடக்கும் போராட்டம்” என்றார் முகுல் ரோத்கி.

அதாவது அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் கபில் சிபல், முத்தலாக் 1400 ஆண்டுகால பழக்கவழக்கம், எனவே உச்ச நீதிமன்றமோ, அரசோ சீர்த்திருத்தத்தை திணிக்க முடியாது, அது அந்த சமூகத்திற்குள்ளிருந்துதான் வர வேண்டும் என்று வாதிட்டதை எதிர்த்து முகுல் ரோத்கி மேற்கண்ட வாதத்தை முன்வைத்தார்.

முகுல் ரோத்கி மேலும் வாதிட்டபோது, “மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும். ஆனால் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே கேள்வி. சட்டத்தேவையை எதிர்நோக்காமல் ஒரு மதச்சார்பற்ற நீதிமன்றம் சீர்த்திருத்தத்தை வலியுறுத்துவது அவசியம். பெண்கள் உரிமைக்கும் நலிவுற்றோருக்குமான பாதுகாவலராக நீதிமன்றம் இருக்க வேண்டும். அவர்களது அடிப்படை உரிமைகள், பெண்களின் கண்ணியம் ஆகியவற்றை காப்பாற்றுங்கள். மதச்சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 25-ம் கூட அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டதுதான்” என்றார்.

இதற்கு நீதிபதி குரியன் ஜோசப் பதிலளிக்கையில், இதே அரசியல் சாசனம்தான் தனிச்சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் விட்டு விடுக என்கிறது என்றார்.

இதற்கு ரோத்கி பதில் அளிக்கையில், “ஆம், நாங்கள் உங்கள் மதத்தை காக்கிறோம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது, ஆனால் உங்கள் தனிச்சட்டங்களுக்கும் சமத்துவம், மரியாதை அல்லது கண்ணியம் காக்கப்படுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு இடையே மோதல் ஏற்படும் போது தனிச்சட்ட நடைமுறைகள் வழிவிட்டு விலக வேண்டும்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, பிரிவினையின் போது ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. எனவே அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் அத்தகைய நிலைமைகளின் தொடர்ச்சியை விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் ஒவ்வொரு மதத்தின் மையமான, முக்கியமான அம்சங்களை தக்க வைத்துள்ளது. ஆனால் இவையெல்லாமும் கூட அடிப்படை உரிமைகளுக்குட்பட்டதுதான் என்று கூறுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

“இது உண்மையில் மதச்சார்பற்ற பன்மைத்துவ அரசியல் சாசனச்சட்டமாகும். எனவே அரசியல் சட்ட ரீதியாகத்தான் முத்தலாக் அணுகப்பட முடியுமே தவிர குரான் மூலம் அல்ல” என்று கூறினார் முகுல் ரோத்கி.



“பாவகரமானது, விரும்பத்தகாதது, தெரிவிற்குரியது என்ற ஒன்று எப்படி அதே வேளையில் மதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க முடியும்? முத்தலாக் முக்கியமானதல்ல என்பதற்கு நிரூபணம் பல நாடுகளில் அம்முறை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதே” என்றார் முகுல் ரோத்கி.

மேலும் அவர் சுட்டிக்காட்டிய போது, இந்து மதம் கூட சதி, குழந்தைகளைக் கொலை செய்தல், தேவதாசி போன்ற நடைமுறைகளை ஒழித்துக் கட்டியதுதானே என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி கேஹர் குறுக்கிட்டு, ‘இவையெல்லாம் சட்டங்கள் மூலம் அழித்தொழிக்கப்பட்டனவே தவிர நீதிமன்றங்களால் ஒழிக்கப்படவில்லை’ என்றார்.

புதிய முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற மத்திய அரசின் வாதத்திற்கு பதில் அளித்த நீதிபதி நாரிமன், அதற்கு முதலில் மூன்று வடிவங்களில் செயல்படும் முத்தலாக் நடைமுறையை சட்ட ரீதியாகச் செல்லாது என்று கோர்ட் உத்தரவிட வேண்டும், ‘இதை நாங்கள் செய்தால், எங்கள் கதவுகள் மூடப்படும், பிறகு சட்டமியற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கே ஏற்படும்’ என்று எச்சரித்தார்.

இதற்குப் பதில் அளித்த முகுல் ரோத்கி, “அரசுக்காக நான் பேச முடியாது. நான் இந்திய அரசுக்காக பேசுகிறேன். அரசு புதிய சட்டம் கொண்டு வரத் தயார் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கவே எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x