Published : 09 Aug 2017 11:37 AM
Last Updated : 09 Aug 2017 11:37 AM
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மத்தியில், பலத்த போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் காங்கிரஸின் அகமது படேல்.
குஜராத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, திலீப்பாய் பாண்டியா மற்றும் காங்கிரஸை சேர்ந்த அகமது படேல் ஆகியோரின் பதவிக் காலம் வரும் 18-ம் தேதி நிறைவடைகிறது. இந்த 3 காலியிடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் பாஜக தரப்பில் அமைச்சர் ஸ்மிருதி இரானியும். கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும் போட்டியிட்டனர்.
மொத்தம் 4 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டி ஏற்பட்டது. குஜராத் சட்டப்பேரவையின் மொத்த பலம் 182 ஆகும்.
அண்மையில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் தற்போது 176 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக வுக்கு 122 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால் அமித் ஷா, ஸ்மிருதி இரானி நேற்றைய தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றனர்.
பாஜகவின் 3-வது வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத் வெற்றிபெற 15 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. அதேநேரம் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலின் வெற்றியும் கேள்விக் குறியானது. இந்தப் பின்னணியில் நேற்று குஜராத் சட்டப்பேரவை வளாகத்தில் தேர்தல் நடந்தது. இதில் அணி மாறிய 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு சாதகமாக வாக்களித்தனர்.
இதனிடையே வாக்குப் பதிவின்போது அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் தங்களின் வாக்குச்சீட்டை பாஜக வேட்பாளர் அமித் ஷாவிடம் காட்டினர். இது குறித்து காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தேர்தல் விதிகளின்படி வாக்குச்சீட்டை வேட்பாளருக்கு காண்பிக்கக் கூடாது. எனவே 2 எம்எல்ஏக்களின் வாக்குகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த முறைகேடான செயல்பாட்டின் காணொலியைத் தேர்தல் ஆணையம் காண வேண்டும் என்றும் காங்கிரஸார் கோரிக்கை விடுத்தனர்.
அதேநேரம் பாஜக சார்பில் மூத்த மத்திய அமைச்சர்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகினர். வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் வாக்குகளை எண்ணும் பணி தடைபட்டது.
காங்கிரஸுக்கு பின்னடைவு
முன்னதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் வகேலா மற்றும் அவரின் மகன் உட்பட 7 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று காங்கிரஸ் முன்கூட்டியே எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருந்த 44 எம்எல்ஏக்களில் ஒருவரான கம்ஷி படேல் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது, காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 43 பேர் காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இந்நிலையில் மற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதில் மர்மம் நீடித்து வந்தது.
காங்கிரஸாருடன் வாக்களிக்க வந்த ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சோட்டுபாய் வாசவா பாஜகவுக்கு வாக்களித்ததாகக் கூறப்பட்டது. அதன்பின்னர் அவர் காங்கிரஸுக்கு ஆதரவளித்ததாகக் கூறினார்.
2 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ், தனது ஆதரவு நிலைப்பாட்டை இரு கட்சிகளுக்கும் அளித்தது. கந்தால் ஜடேஜா பாஜகவுக்கு வாக்களிக்க, மற்றொரு எம்எல்ஏ ஜெயந்த் படேல் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்தார்.
செவ்வாய்க் கிழமை பின்னிரவில் பேசிய பாஜக கூட்டணிக் கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சியின் நளின் கட்டாடியா, பாஜகவுக்கு தான் வாக்களிக்கவில்லை என்று பரபரப்பைக் கிளப்பினார்.
தேர்தல் ஆணைய அறிவிப்பு
அதைத் தொடர்ந்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், வெற்றி பெற்ற மூன்று பேர்களின் பெயர்களை அறிவித்தது. அதில் 2 பாஜக எம்பி,க்களோடு காங்கிரஸைச் சேர்ந்த அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய குஜராத் தலைமை தேர்தல் அலுவலர் பி.பி. ஸ்வெய்ன், ''வாக்குச் சீட்டுகளைக் காட்டிய இருவரின் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன'' என்றார்.
இந்நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT