Published : 15 Aug 2017 11:22 AM
Last Updated : 15 Aug 2017 11:22 AM
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதியில் தேசிய கொடியேற்றுகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்த தெலங்கானாவின் தலைநகரானது ஹைதராபாத். இதையடுத்து, ஆந்திர மாநிலத்தின் தற்காலிக தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 3 ஆண்டுகளாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜயவாடாவில் தேசிய கொடியேற்றி வந்தார்.
இந்த ஆண்டு திருப்பதியில் உள்ள தாரக ராமா விளையாட்டு மைதானத்தில் 70-வது சுதந்திர தின விழாவை கொண்டாட ஆந்திர அரசு முடிவு செய்தது. இதற்காக திருப்பதி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரமெங்கும் மூவர்ண தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுதவிர வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,500 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், தேவஸ்தான சத்திரங்கள் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் திருப்பதி வந்தடைந்தார் . அவரை மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, தேவஸ்தான அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இங்கு இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியேற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT