Published : 02 Aug 2017 09:49 AM
Last Updated : 02 Aug 2017 09:49 AM

அக்டோபர் முதல் முழுநேர அரசியல்: நடிகர் பவன் கல்யாண் அறிவிப்பு

வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கூறினார்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் நேற்று அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது ஸ்ரீகாகுளம் மாவட்டம், உத்தானம் பகுதியில் சிறுநீரக பாதிப்பு பிரச்சினை, போலாவரம் அணைக்கட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் பேசினார்.

பின்னர் இது தொடர்பாக விஜயவாடாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஸ்ரீகாகுளம் மாவட்டம், உத்தானம் பகுதியில் பெருமளவு மக்கள் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துவிட்டு, வரும் அக்டோபர் முதல் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளேன். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கட்டாயம் வழங்க வேண்டும். இதற்காக தீவிர போராட்டத்தில் இறங்குவேன். நான் எந்தக் கட்சிக்கும் மாற்றுக் கட்சியாக களத்தில் இறங்கவில்லை. ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு சேவை செய்யவில்லை எனில் அதை தட்டிக்கேட்கும் கட்சியாக ஜனசேனா செயல்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x