Last Updated : 14 Nov, 2014 09:11 PM

 

Published : 14 Nov 2014 09:11 PM
Last Updated : 14 Nov 2014 09:11 PM

நாட்டின் பிரதமராகவில்லை என்ற வருத்தம் இல்லை: அத்வானி

நாட்டின் பிரதமராகவில்லை என்ற வருத்தம் தனக்கு இல்லை என்று மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, “நாட்டின் பிரதமராகவில்லை என்ற வருத்தம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. மக்களவையில் எனது இடம், அனைத்து கட்சிகளிடமிருந்தும் எனக்கு கிடைத்து வரும் மரியாதை ஆகியவை போதுமானதற்கும் மேலானது.

இந்த மரியாதையும், மதிப்பும் பிரதமர் ஆவதை விட உயர்வானது என்றே கருதுகிறேன்” என்றார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜே.கே.சின்ஹா நடத்தி வரும் பள்ளி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 87 வயதான மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். முசாஹர் பிரிவினருக்காக இந்தப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. பிஹாரில் உள்ள மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள சமூகம் ஆகும் இது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி பற்றி அவர் கூறும்போது, “நரேந்திர மோடி அரசு நன்மையையே செய்து வருகிறது. இதுவரை ஆட்சேபத்திற்குரியதை மோடியின் அரசு செய்யவில்லை. இன்னும் காலம் செல்லச்செல்ல ஆட்சியைப் பற்றி மதிப்பிட முடியும். எனவே இப்போதே மதிப்பீட்டு முடிவுக்கு வருவது நியாயமாகாது. ஆனால் அறிகுறிகள் நல்லபடியாகவே உள்ளது” என்றார்.

பாஜக ஆட்சியின் மீது காங்கிரஸ் வைக்கும் விமர்சனங்கள் குறித்து பேசிய அத்வானி, “காங்கிரஸ் அடுத்தடுத்து செய்த ஊழல்களினால், இந்த ஆண்டில் லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அபாரமான வெற்றியை ஈட்டியது. எங்களது வெற்றிக்காக யாராவது அதிகம் உழைத்தார்கள் என்றால் அது காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்” என்று புன்னகைத்தபடியே அவர் நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x