Last Updated : 26 Nov, 2014 10:09 AM

 

Published : 26 Nov 2014 10:09 AM
Last Updated : 26 Nov 2014 10:09 AM

கதக் நடனக் கலைஞர் சித்தாரா தேவி காலமானார்

கதக் நடனக் கலையின் பேரரசி என்று வர்ணிக்கப்பட்ட சித்தாரா தேவி (94) மும்பையில் நேற்று காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று அதிகாலை இயற்கை எய்தியதாக அவரது மருமகன் ராஜேஷ் மிஸ்ரா கூறினார். வெளிநாடு சென்றிருக்கும் அவரது மகனின் வருகைக்கு காத்திருப்பதாகவும் சித்தாரா தேவியின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

சித்தாரா தேவி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1920-ம் ஆண்டு பிறந்தார். அவரது 11-வது வயதில் அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் தனலட்சுமி என்பதாகும். இவரது தந்தை கதக் நடனத்தில் தேர்ந்தவர். அவரைப் போலவே சித்தாரா தேவி கதக் நடனத்தில் உலகப் புகழ்பெற்று விளங்கினார்.

மொகாலே ஆசம் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் கே.ஆசிப்பை சித்தாரா திருமணம் செய்துகொண்டார். பின்னர் பிரதாப் பாரட்டை இரண்டாவதாக மணந்தார்.

கதக் நடனத்தில் 60 ஆண்டுகள் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மத்திய அரசால் 2011-ம் ஆண்டு வழங்கப்பட்டது. கவுரவம் மிக்க சங்கீத நாடக அகாடமி, பத்மிஸ்ரீ, காளிதாஸ் சம்மன் போன்ற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

சித்தாரா தேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கதக் நடனத்துக்கு 60 ஆண்டுகள் அவர் ஆற்றிய சேவையையும் நினைவு கூர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x