Published : 04 Nov 2014 10:47 AM
Last Updated : 04 Nov 2014 10:47 AM

1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: வழக்கு பதிவு செய்தது 622 பேர் மீது தண்டனை பெற்றது 27 பேர் மட்டுமே

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு டெல்லியில் ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 622 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தண்டனை பெற்றவர்கள் வெறும் 27 பேர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் 30, 1984-ல் தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது 1990-ல் உருவாக்கப்பட்ட கலவரத் தடுப்பு பிரிவு, வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் மீது கடந்த செப்டம்பர் வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை தெரிவிக்குமாறு கோபால் பிரசாத் என்பவர் கேட்டிருந்தார். இதன்படி இவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்ட 326 பேர் தொடர்பாக தொடரப்பட்ட 255 வழக்குகளின் கீழ் 622 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 27 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் 121 வழக்குகளில் தொடர்புடைய 591 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள ஐந்து பேர் மீது விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஏழு வழக்குகளில் ஒருவர் மீதான விசாரணை மற்றும் மற்றொருவர் மீதான வழக்கும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விசாரணை நிலுவையில் உள்ள வழக்கு, நாங்லோய் காவல் நிலையத்தில் பதிவானது. இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை முடியாமல் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x