Published : 28 Nov 2014 10:46 AM
Last Updated : 28 Nov 2014 10:46 AM
சேதுசமுத்திரத் திட்டத்தை பாம்பன் பகுதி வழியாக நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
மக்களவையில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து அதிமுக எம்.பி. அன்வர் ராஜா கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, “ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை அமைப்பின் (ரைட்ஸ்) செயலாக்க அறிக்கையின்படி கடல்வழி சுரங்கப்பாதை ரூ. 15,000 கோடி செலவில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?
இதனால், மீனவர்கள் நலன் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செலவழித்த ரூ. 800 கோடி வீணாகிவிட்டது” எனத் தெரிவித்தார் அன்வர் ராஜா.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “முதல் கட்டமாக, இந்த திட்டத்தை பாம்பன் பகுதியில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். இது முடியவில்லை எனில், கடல்வழி சுரங்கப்பாதை முறையில் முயல்வோம்.
மீனவர்கள் நலனை பொறுத்தவரை மற்றவர்களை விட நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இந்த திட்டம் தொடர்பாக விளக்கமான ஆய்வுக்கு பின் சேதுசமுத்திரத் திட்டத்தை முறையாக நிறைவேற்றுவோம். ஆனால், பாம்பன் பாலம் தமிழக அரசின் அதிகார வரம்பிற்குள் இருப்பதால் அதன் அனுமதியும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் இதற்கு தேவை” எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அன்வர் ராஜா, “அமைச்சரின் இந்த பதில் சரியானது அல்ல. இத்திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்த பாஜக, இப்போது அதை நிறைவேற்றும் உறுதியில் இருக்க காரணம் என்ன? இனிமேலாவது மத்திய அரசு இந்த திட்டம் குறித்து தமிழக அரசிடம் ஆலோசனை கேட்குமா?” எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் , “இதற்கு முன்பு சேதுசமுத்திரத் திட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது ராமர் பாலம் வழியாக செல்வதைத்தான் எதிர்த்தோம்.
இப்போதும் அந்த திட்டத் துக்காக ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு ஆகும். இந்த திட்டத்தை பாம்பன் பகுதியில் நிறைவேற்ற வேண்டும் எனக் கவனம் செலுத்தி வரு கிறோம். இது குறித்து ரைட்ஸ் அளித்துள்ள செயலாக்க அறிக் கையை ஆய்வு செய்து செயல் படுத்துவோம்” என விளக்கம் அளித்தார்.
ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை அமைப்பு (ரைட்ஸ்) அளித்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:
பாம்பன் பகுதி வழியாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் தடையாக இருப்பது, புள்ளிவாசல், குருசடை ஆகிய இரண்டு பவளப்பாறை தீவுகளுக்கு இடைப்பட்ட குறுகலான, ஆழமற்ற கடற்பகுதிதான்.
மன்னார் வளைகுடாவுக்கும், பாக் ஜலசந்திக்கும் இடையே வண்டல் படிவு அதிகமாக இருப்பதால், இப்பகுதி விரைவில் தூர்ந்துபோகும் நிலை உள்ளது. இந்த இடத்தில் கால்வாயின் அகலம் 125 மீட்டராகவும், ஆழம் 2.13 மீட்டராகவும் இருக்கிறது. கடல் அலை அதிகமாக இருக்கும்போதுதான் இந்த கால்வாய் வழியாக கப்பல் செல்ல முடியும். இக்கால்வாயை 12 மீட்டருக்கு தூர்வாரி ஆழப்படுத்தினால்தான் 30 ஆயிரம் டன் வரை எடையுள்ள கப்பல்கள் பாம்பன் கால்வாய் வழியாக செல்ல முடியும்.
பாம்பன் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்தின் மொத்த தூரம் 136 கி.மீ. ஆகும். இதில் 54 கி.மீ. நீளம் பாக் ஜலசந்தியில் உள்ளது. ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட சேதுசமுத்திரத் திட்டம் மூலம் 54 கி.மீ. தூரம் தூர் வாரப்பட்டுள்ளது. மேலும் 43 கி.மீ. தூரத்துக்கு பாம்பன் பகுதியில் 12 மீட்டர் ஆழத்தில் தூர் வாரப்பட வேண்டியுள்ளது. மீதமுள்ள 39 கி.மீ. தூரத்தில் இயற்கையாகவே போதிய ஆழம் இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT