Last Updated : 21 May, 2017 11:21 AM

 

Published : 21 May 2017 11:21 AM
Last Updated : 21 May 2017 11:21 AM

புதைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, மீண்டும் உயிர்த்துவிட்டது!

முஸ்லிம் மகளிர் முத்தலாக் விவகாரம் தொடர்பாக அறிவார்ந்த, சித்தாந்த அணி சேர்க்கை நடக்கிறது. உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதைவிட, தொலைக்காட்சிகளில் விவாதிப்பதைவிட, இது சிக்கலானது! எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் வாய்மூடி மவுனம் சாதிப்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம்.

அனைத்துக் கட்சிகளும் ஓரணியில்; எதிர்முனையில் பாஜக போன்றவை எழுபதாண்டுகளாகக் கையாளப்பட்ட ‘தாஜா’ கொள்கை முடிவுக்கு வருவதை உற்சாகமாகக் கொண்டாடுகின்றன. முஸ்லிம் மகளிருக்கு சம உரிமைகள் கிடைப்பதைத் தடுக்க முடியாமல் வேறு விவாதங்களை முன்வைப்போரும் இருக்கின்றனர். பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிராகப் பேசத் துணியவில்லை, அப்படி எவராலும் பேசிவிடவும் முடியாது.

முத்தலாக் விவகாரம் இப்போது பாகிஸ்தான், காஷ்மீர், ஊழல் போன்ற விவகாரங்களுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பிடித்திருக்கிறது.

இஸ்லாமியப் பழமைவாத அமைப்புகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் வாதங்களை முன்வைக்கும் ஒவ்வொரு முறையும், காங்கிரஸ் பிரமுகர்கள் நெளிவதைப் பார்க்க வேண்டுமே!

பொதுவெளியில் இயங்கும் ‘தாராளர்கள்’ (இடதுசாரிகள் உள்பட) பின்வாங்கிவிட்டனர். எந்தவித மாற்றத்தையும் எதிர்க்கும் ‘தாராளர்கள்’ சிலர் மட்டும்தான் எதிர்த்துப் பேசுகின்றனர். ‘உங்களுடைய முன்னுரிமைப் பிரச்சினைகளைக் கைவிட்டுவிட்டு இதைப் போய் கையிலெடுத்தீர்களே?’ என்று பாஜகவை அவர்கள் கேலி பேசலாம்.

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் இதையெல்லாம் லட்சியம் செய்யாது; அதற்கு அவசியமும் இல்லை. அவர்கள் மிகப்பெரிய சித்தாந்த, கொள்கைவழி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கு ஆதரவாகவே எப்போதும் வாக்களித்த, 17 கோடி சிறுபான்மை வாக்காளர்களுக்கு ஆதரவாக இப்போது திரண்டாக வேண்டிய அச்சத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆளாகியுள்ளன.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அது இந்து வலதுசாரிகளுக்கு வெற்றியே. இதற்காக நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு ஆர்எஸ்எஸ் தனிப்பெரும் மரியாதையைக் காட்டக்கூடும்.

முஸ்லிம் தனிச் சட்டங்களை - அதிலும் திருமணம், மணவிலக்கு தொடர்பாக - சீர்திருத்த வேண்டும் என்ற வேட்கை இந்து வலதுசாரிகளுக்கு ஏற்பட்டதற்குக் காரணம் 60 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவங்கள்தான். அரசியல் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த நேரு, இந்து சட்டங்களைத் திருத்தியும் மாற்றியும் செயல்பட்டார். இந்து சமூகம் சந்தித்த பல மோசமான தீமைகள் நீக்கப்பட்டன. குடும்பச் சட்டங்களில் இந்து மகளிருக்கு சம உரிமை தரப்பட்டது. இது இந்துக்கள் முன்னேற உதவியது. மணவிலக்கு, வாரிசுரிமை, சுவீகாரம், விதவை மறுமணம், ஒருதார மணம் ஆகியவற்றைச் சாதிக்க உதவியது. பெரும்பாலான இந்துக்களும் இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றனர். 1960-களின் நடுப்பகுதியில் இந்த விவகாரங்கள் அரசியல் அரங்கிலிருந்தே மறைந்துவிட்டன.

நாடாளுமன்றத்திலும் கட்சி அமைப்புகளிலும் அந் நாள்களில் நடந்த விவாதங்களைப் படித்தால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த பழமைவாதிகள் இவற்றை எதிர்த்ததை அறிய முடியும். தங்களுடைய கருத்து ஏற்கப்படாததால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்புணர்வும், வடுக்களும் மறையாதவை. இந்துக்களிடம் பறித்த மத உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கை காலப்போக்கில் தேய்ந்து மறைந்தன. “இந்து சட்டத் திருத்த மசோதா அமிர்தம் என்றால், அதை ஏன் நம்முடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு மறுக்க வேண்டும்?, இல்லை இது விஷம்தான் என்றால், இந்துக்களுக்கு மட்டும் ஏன் புகட்ட வேண்டும்?” என்று தேர்தல் காலத்தில் ஜனசங்கத்தினர் கேட்டனர்.

காலப்போக்கில் இது தொடர்பான அச்சம் இந்துக்களிடையே பெரிதானது. “முஸ்லிம்கள் 4 பெண்களை திருமணம் செய்து எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம், இந்துக்கள் மட்டும் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமாம்” என்ற எண்ணம் வலுத்தது. “நாங்கள் ஐவர், எங்களுக்குப் பிறந்தவர்கள் இருபத்தைவர்” என்று 2002 செப்டம்பரில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி கேலி பொங்கப் பேசியிருக்கிறார். உலக அளவில் ஜிகாதிகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் தோன்றியபோது பெரும்பான்மை இந்துக்களிடையே அச்சம் பரவியது. பாகிஸ்தானுடனான உறவில் ஏற்பட்ட விரிசலும் நிலைமையை சிக்கலாக்கியது. மோடி-ஷா கூட்டணி இந்த அச்சத்தைத் தங்களுடைய அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. ‘ஸ்மசானம் கப்ரிஸ்தான்’ ஒப்பீட்டுப் பேச்சு இதன் தொடர்ச்சிதான். முஸ்லிம் மகளிரின் உரிமைக்காக, சமூக சீர்திருத்த தாராளர்களாக மாறியுள்ளனர்!

இது நேருவைப் பழிக்கும் காலம். பெரும்பான்மைச் சமூகத்தின் சட்டங்களை மட்டும் திருத்திவிட்டு, சிறுபான்மைச் சமூகங்களைத் திருத்தும் பொறுப்பை அந்தந்த மதத் தலைவர்களிடமே விட்டுவைத்தார் நேரு. ஆனால் அவர்களோ சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் எதிர்ப்புகளைக் கடுமையாக ஒடுக்கினர். பெண்களுக்கு ‘விருத்த சேதனம்’ செய்யும் செயலும் இதில் அடங்கும். இந்துக்களின் பலதார மண உரிமையைத் தடுத்து சட்டமியற்றிய மதச்சார்பற்ற நாடாளுமன்றம், இதை ஏன் தடை செய்யச் சட்டமியற்றவில்லை? சிறுபான்மைச் சமூகத்தவரின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக என்று நேருவின் விமர்சகர்கள் சாடக்கூடும். இதைத் தடை செய்திருந்தால் சிறுபான்மைச் சமூகத்தின் அடுத்த தொகுதியினர் பாகிஸ்தானை நோக்கிச் சென்றிருப்பர். நேருவின் வாரிசுகளுக்கு அவருடைய அறிவாற்றலோ, தார்மிக ஆளுமையோ, மதச்சார்பற்ற தன்மையைக் காப்பதில் உறுதியோ இல்லை. பாபாக்கள், சாதுக்கள், தாந்திரீக யோகிகளை நாடினார் இந்திரா காந்தி. ஷா பானு என்ற பெண் தொடுத்த ஜீவனாம்ச வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி மாற்றினார் ராஜீவ் காந்தி. அதற்கு ஈடு செய்யும் விதத்தில் அயோத்தியில் உற்சவ விக்கிரகங்களை எடுத்து பூஜை செய்ய அனுமதி அளித்தார். 1989 தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தில், ‘ராம ராஜ்யம் அமைப்பேன்’ என்று கூட வாக்குறுதி அளித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதை இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றது. பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடை செய்யும் ‘பொடா’ சட்டத்தை ரத்து செய்தது. அந்தச் சட்டமே முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து இயற்றப்பட்டதைப் போல பேசப்பட்டது. டெல்லியிலேயே ‘பட்லா அவுஸ்’ என்ற வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைப் போலீஸார் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்ற சம்பவத்தை, முஸ்லிம்கள் தவறாக நினைப்பார்களோ என்ற ஐயத்தில், ‘போலி என்கவுன்ட்டர்’ என்று மூத்த காங்கிரஸ் தலைவரை விட்டுப் பேசவைத்தது. மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கூட ‘ஆர்எஸ்எஸ்ஸின் சதி’ என்றே பேசப்பட்டது. உருவ வழிபாட்டிலேயே நம்பிக்கையில்லாத நேருவின் மதச்சார்பின்மை, எல்லா மதங்களுக்கும் எதிராக ஒரே மாதிரியாக இருந்தது. வாரிசுகளிடம் அது இல்லை.

1985-லிருந்து ‘மதச்சார்பின்மை’ அப்பட்டமான அரசியல் கொள்கையாகவே கடைப்பிடிக்கப்பட்டது. ஜின்னாவுக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிமைத் தலைவராக நம்பி ஏற்றதில்லை. மதச்சார்பற்ற இந்துத் தலைவர்களையே ஏற்று வருகின்றனர். அந்தத் தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளையும் வாழ்க்கைத் தரத்தையும் கவர்ந்துகொள்வதைக்கூட அவர்கள் அனுமதித்து வருகின்றனர். மதச்சார்பின்மை என்ற அந்த அரசியல் அஸ்திரத்தைத்தான் இப்போது மோடியும் ஷாவும் புதைக்கின்றனர் அல்லது எரிக்கின்றனர் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி கருதிக் கொள்ளுங்கள்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x