Published : 12 Aug 2017 10:19 AM
Last Updated : 12 Aug 2017 10:19 AM
ஆந்திர மாநிலம், சித்தூரில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 துணிக்கடைகளில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகளில் இருந்த பல கோடிக்கும் மேற்பட்ட துணிகள் தீயில் கருகின.
சித்தூரில் உள்ள சர்ச் வீதியில் 2 துணிக்கடைகள் அருகருகே உள்ளன. இதில் ஒரு கடை 2 மாடிகளையும், மற்றொரு கடை 4 மாடிகளையும் கொண்டதாகும். இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பக்கத்து கட்டிடத்துக்கும் பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடினர்.
தகவல் அறிந்து 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடினர். எனினும் 2 அடுக்கு மாடி கட்டிடம் தீயில் எரிந்து தரைமட்டமானது. பக்கத்தில் இருந்த பூக்கடைகளும் நாசமடைந்தன. இந்த கட்டிடத்தில் நேற்று மதியம் தீ அணைக்கப்பட்டது.
அருகில் இருந்த 4 அடுக்கு மாடி கட்டிடத்திலும் தீ வேகமாக பரவியது. இந்த கட்டிடத்தை பொக்லைன்கள் உதவியோடு தீயணைப்பு வீரர்கள் உடைத்து தீயை கட்டுப்படுத்தினர். நேற்று மாலை தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இரண்டு கடைகளிலும் பல கோடி ரூபாய் மதிப்புக்கு துணிகள் கருகி இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடையின் அருகே உள்ள டிரான்ஸ்பாரம் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 2 துணிக்கடைகளிலும் போதிய தீயணைப்பு கருவிகள் இல்லை என தீயணைப்பு துறை மூத்த அதிகாரி ஸ்ரீநிவாஸ் ரெட்டி தெரிவித்தார். சித்தூர் ஆட்சியர் பிரத்யும்னா, எஸ்.பி. ராஜசேகர், மேயர் அனுராதா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT