Published : 01 Aug 2017 12:50 PM
Last Updated : 01 Aug 2017 12:50 PM
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுன்ட்டரில் லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தின் படைப்பிரிவு தலைவர்களுள் ஒருவரான அபு துஜானா கொல்லப்பட்டார்.செவ்வாய்க்கிழமை காலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புல்வாமா மாவட்டத்தின் ஹக்ரிபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருட்ன்ஹ லஷ்கர்-இ-தொய்பா தலைவர் அபு துஜானா மற்றும் அவரின் கூட்டாளி இருவரும் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.
இது காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பெரிய சாதனை என்று காஷ்மீர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவரான அபு துஜானாவின் தலைக்கு ரூ.15 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. 20-களின் இடையில் இருக்கும் துஜானா 2014-ல் லஷ்கர்- இ-தொய்பாவின் செயல்பாட்டு தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் நடைபெற்ற ஏராளமான தாக்குதல்களுக்குப் பின்னால் துஜானா செயல்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஏராளமான நிகழ்வுகளில் அவர் காவல்துறையிடம் இருந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இணைய சேவைகளுக்குத் தடை
லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலும் அனைத்து இணைய வழங்குநர்களின் 2ஜி, 3ஜி, 4ஜி இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பிராட்பேண்ட் சேவைகள் செயல்பாட்டில் இருந்தாலும், அவற்றின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
வீடியோக்கள், படங்களைப் பதிவேற்றம் செய்வது, பகிர்வதைத் தடுக்க இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT