Published : 15 Aug 2017 11:01 AM
Last Updated : 15 Aug 2017 11:01 AM
சாரு வாலி கண்ணா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுவில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 35ஏ மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சாசன ஷரத்து 6-ன் கீழ் அம்மாநில மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இப்பிரிவு பெண்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. அம்மாநில பெண் ஒருவர் நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் இல்லாத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவருக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு உரிமையும் மறுக்கப்படுகிறது. அவரது மகனுக்கும் சொத்துரிமை மறுக்கப்படுகிறது. நிரந்தர குடியுரிமை சான்று இல்லாத ஒருவரால் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியும். சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாது. பாரபட்சமான இந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ள பிரிவு செல்லுமா, செல்லாதா அல்லது சலுகை அளித்ததில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேவைப்பட்டால் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.
இதேபோன்ற மனுக்கள் ஏற்கெனவே 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கையும் அந்த அமர்வு விசாரிக்கும். தேவைப்பட்டால் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவெடுக்கும்’ என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர். இம்மாத இறுதியில் வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT