Published : 12 Nov 2014 03:12 PM
Last Updated : 12 Nov 2014 03:12 PM
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.
இதில் குரல் வாக்கெடுப்பு நடத்தியதை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதில் ஆளுர் வித்யாசாகர் ராவை காங்கிரஸ் உறுப்பினர்கள் முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் 121 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக கடந்த 31 ம் தேதி ஆட்சி அமைத்தது. மைனாரிட்டி அரசின் முதல்வராகப் பொறுப்பேற்ற தேவேந்திர பட்னாவிஸ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இதையொட்டி மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பாஜக அரசு நேற்று நம்பிக்கை வாக்கு கோரியது. முன்னதாக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக சிவசேனா நேற்று காலை அறிவித்தது.
இந்நிலையில், அவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் ஷெலர் தாக்கல் செய்தபோது, அதனை சபாநாயகர் ஹரிபாவ் பக்டே, குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். இத்தீர்மானத்தை ஆதரிப்பதாக பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
உடனே சிவசேனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித் தனர். அவர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று முறைப்படி வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஹரிபாவ் பக்டே அறிவித்தார். தொடர்ந்து அவையில் அமளி நீடித்ததால் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாஜக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியிருந்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது அவையில் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.
இந்நிலையில் அவை மீண்டும் கூடியதும் சிவசேனா எம்எல்ஏக்கள் எழுந்து, முறைப்படி வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என குரல் எழுப்பினர்.
இதற்கு சபாநாயகர் பக்டே, “இந்த விவகாரம் முடிந்துவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேறிவிட்டது” என்றார்.
ஆளுநர் முற்றுகை
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று பிற்பகல் அவைக்கு உரை நிகழ்த்த வந்தார். அவைக்கு வெளியே காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநரை சூழ்ந்துகொண்டு அவைக்கு வரவிடாமல் தடுத்தனர். இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் தலையிட்டு ஆளுநரை பத்திரமாக சட்டமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர் அவையில் உரை நிகழ்த்தினார்.
இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஏக்நாத் காட்சே அவை யில் பேசும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களால் ஆளுநர் மற்றும் 2 பேரவை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மன்னிப்பு கோருவதால் இப்பிரச்சினை முடிந்துவிடாது. இதுபோன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT