Published : 04 Jul 2017 01:28 PM
Last Updated : 04 Jul 2017 01:28 PM
நியாயமான காரணங்களால் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாமல் போன நபர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நியாயமான காரணங்களால் பணத்தை மாற்ற முடியாமல் போனவர்களுக்காகவே தற்போது சிறப்பு கவுன்ட்டரை திறந்து அதன் மூலம் அவர்கள் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சுதா மிஸ்ரா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார், நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள், "பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு அதனை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட காலகட்டத்தில் நியாயமான காரணங்களுக்காக அவற்றை மாற்ற முடியாமல்போன நபர்களுக்கு எல்லா கதவுகளையும் அடைத்துவைப்பது என்பது கொடுமையான செயல்.
ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்து அவரால் அந்தப் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் போயிருந்தால் அவருக்கு நிச்சயமாக இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உண்மைகளை ஆதாரத்தோடு விளக்கும் பட்சத்தில் அவருக்கு அரசு இன்னொரு வாய்ப்பு வழங்காமல் இருக்க முடியாது. அவரது பணத்தை அவர் எதற்காக இழக்க வேண்டும்.
அரசின் கெடுபிடிகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீர்வு அளிக்காவிட்டால் பிரச்சினைகள் பெரிதாகும்?" என்றனர்.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் ரஞ்சித் குமார், "பண மதிப்பு செய்யப்பட்ட நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக எதற்காக காலக்கெடு விதிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு ஏற்கெனவே பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது.
நிறைய குறுக்கவழிகளில் மக்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சித்தனர். தங்கத்தை வாங்கிக் குவித்தனர். நாடு முழுவதும் 800 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. உயர் மதிப்பு நோட்டுகளை அதிகளவில் டெபாசிட் செய்த வகையில் 5100 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்வதும் அதிகரித்தது. பெட்ரோல் பங்குகளில் பணம் மாற்றப்பட்டது. எனவேதான் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
ஒவ்வொரு தனிநபருக்காகவும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது" என்றார்.
அப்போது நீதிபதிகள், "நியாயமான காரணங்களால் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாதவர்களுக்கும் ஏதாவது வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும் அல்லவா? மத்திய அரசு அதை செய்ய விரும்பாதது ஏன்? நியாயமானவர்களின் பணத்தை ஏன் பறிக்க நினைக்கிறீர்கள்" என காட்டமாக கேள்வி எழுப்பினர்.
மேலும், இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT