Published : 21 Jul 2017 12:58 PM
Last Updated : 21 Jul 2017 12:58 PM

பசு பாதுகாவலர்கள் அத்துமீறினால் நாங்கள் பொறுப்பல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது மாநில அரசே நடவடிக்கை எடுக்கும் இதில் மத்திய அரசின் பங்கு என்று எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பசு பாதுகாப்பு என்ற போர்வையில் எவ்வித சட்டவிதி மீறலையும் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்பதை நீதிமன்றம் வாயிலாக ஆவணப்படுத்த விரும்புவதாக அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆங்காங்கே பசு பாதுகாவலர்கள் நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவங்களை குறிப்பிட்டு அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வழிவகை செய்ய வலியுறுத்தி செஹனாஸ் பூனாவாலா என்பவர் உள்ளிட்ட பலர் தாக்குதல் செய்த மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே இந்த மனுக்கள் மீது மத்திய அரசோ இல்லை வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக மனுதாரர்களால் குறிப்பிடப்பட்டுள்ள ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகளோ இதுவரை நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தனது வாதத்தை தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் பதிலளிக்கையில், "பசு பாதுகாப்பு என்ற பெயரில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது மாநில அரசே நடவடிக்கை எடுக்கும். இது சம்பந்தப்பட்ட மாநில அரசு சம்பந்தப்பட்ட விவகாரம். மத்திய அரசுக்கு இதில் எவ்வித பங்கும் இல்லை. அதேவேளையில், பசு பாதுகாப்பு என்ற போர்வையில் எவ்வித சட்டவிதி மீறலையும் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்பதை நீதிமன்றம் வாயிலாக ஆவணப்படுத்த அரசு விரும்புகிறது" என்றார்.

மேலும், பசு பாதுகாப்பு தொடர்பாக நடந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு நாடாளுமன்றத்திலும் விளக்கியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச, குஜராத் மாநிலங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தத்தம் மாநில அரசுகள் இதுவரை விளக்கத்தை பதிவு செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டு அமர்ந்தனர்.

மத்திய, மாநில அரசு விளக்கங்களையும் மனுதாரர் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x