Published : 12 Jul 2017 12:13 PM
Last Updated : 12 Jul 2017 12:13 PM
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகள் மீது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் சமூகநலத் திட்டப் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு கடந்த மாதம் 27-ம் தேதி விசாரித்துது. மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
‘ஆதார் எண் இல்லாதவர்கள், மத்திய அரசின் சமூகநலத் திட்டப் பயன்களைப் பெற முடியாமல் போய் விடும்’ என்று மனுதாரர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். ஆனால், அதுபோல் யாரும் நீதிமன்றத்தை அணுகவில்லை என்று கூறி இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான மனுவை இன்று (புதன்கிழமை) விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், "ஆதார் எண்ணை சமூக நலத்திட்ட பயன்களைப் பெற இணைப்பது தொடர்பான அனைத்து வழக்குகள் மீது இனி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முடிவு எடுக்கும்" என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT