Last Updated : 20 Jul, 2017 08:04 AM

 

Published : 20 Jul 2017 08:04 AM
Last Updated : 20 Jul 2017 08:04 AM

தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதம்

தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான் என்று மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.

தனிநபர் சுதந்திரம் என்பது அடிப் படை உரிமைகளில் ஒன்றா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டத்துடன் தொடர்புடைய கேள்வி என்பதால் இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் அத்தகைய உரிமை குடிமக்களுக்கு வழங்கப்படவில்லை. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் தெரிந்தே இந்த உரிமையை சேர்க்க வில்லை. ஏற்கெனவே நடந்த எம்.பி. சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமை அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

பத்திரிகை சுதந்திரம்

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் வாதிடும்போது, “தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமையை அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்படாத தெளிவற்ற உரிமை என்று கூறுவதை ஏற்க முடியாது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ல் தனிநபர் ஒருவர் சுதந்திரமாக வாழ்வதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்துதான் அந்த தனிநபர் உரிமை கிடைக்கிறது. அட்டர்னி ஜெனரல் குறிப்பிடும் வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குற்ற வழக்குகளில் நடைபெறும் சோதனையில் தனிநபர் உரிமை மீறப்படுகிறதா என்பதைப் பற்றியதுதான். அதற்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை” என்றார்.

மூத்த வழக்கறிஞர் சோலி சொரப்ஜி வாதிடும்போது, “நாட்டு மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம் பற்றி கூட, அரசியலமைப்பு சட்டத்தில் விரிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், பிரிவு 19(1)-ல் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தில் பத்திரிகை சுதந்திரம் அடங்கியுள்ளதாக முடிவுக்கு வந்துள்ளோம். அதுபோல தனிநபர் சுதந்திரமாக வாழ வழங்கப்பட்டுள்ள உரிமையில் தனிநபர் உரிமை அடங்கியுள்ளது” என்றார்.

மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடும்போது, “ஆதார் திட்டத்தில் ஒருவரது கருவிழி, கை ரேகை உள்ளிட்டவை பயோமெட்ரிக் முறைப்படி எடுக்கும்போது, அவரது உடல் மீது அரசு ஆக்கிரமிப்பு செய்கிறது. சர்வாதிகார ஆட்சியில் மட்டுமே ஒருவரது உடல் மீது அரசு அத்துமீறி செயல்படும். நம்மைப் போன்ற ஜனநாயக நாட்டில் அதற்கு இடமில்லை” என்றார்.

மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் வாதிடும்போது, “எம்.பி.சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் உள்ள ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு வாதிடுவது ஏற்புடையது அல்ல. ஒரு குடிமகன் வாழவும், சுதந்திரமாக செயல்படவும் உரிமை உண்டு என்று சொல்லிவிட்டு, அவருக்கு தனிநபர் உரிமை என்று எதுவும் இல்லை என்று கூற முடியாது. இது முரண்பட்ட நிலை” என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x