Published : 10 Apr 2014 12:00 AM
Last Updated : 10 Apr 2014 12:00 AM
பிஹாரில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு மருத்துவக் கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய தேர்தல் ஆணையம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதே போன்ற விழிப்புணர்வுப் பணியில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் பிஹார் மாநிலப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
வாக்காளர்கள் வாக்குப் பதிவை மேற்கொண்டபின், தங்களின் விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டினால், மருத்துவக் கட்டணத்தில் 25 சத வீதம் சலுகை அளிக்கப்படும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதற்காக வாக்குப் பதிவு நாளின்போது, தனியார் மருத்துவ மனைகள் அனைத்தையும் திறந்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மாநிலம் முழுவதும் 8,000 டாக்டர்கள் உள்ளனர். பாட்னாவில் மட்டும் 1,000 டாக்டர்கள் உள்ளனர். தேர்தலில் மக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகையை அறிவித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிஹாரின் அரசியல் வட்டாரத்தில் “தி இந்து” செய்தியாளர் கேட்டபோது, “பாட்னாசாஹிப் தொகுதி ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், பிரபல நரம்பியல் நிபுணருமான டாக்டர் கோபால் சிங் சின்ஹா முயற்சியால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்காக, மாநிலம் முழுவதும் சலுகை கட்டண அறிவிப்பை தந்திரமாக அவர் வெளியிட செய்துள்ளார்” என்றனர்.
பாட்னாசாஹிப் தொகுதியில் பாஜகசார்பில் அதன் எம்.பி.யான நடிகர் சத்ரு கன் சின்ஹா மீண்டும் போட்டி யிடுகிறார். காங்கிரஸ் சார்பில் போஜ்புரி மொழி நடிகரான குணால்சிங் போட்டியிடுகிறார். இந்த இரு நடிகர்களுக்கும் இடையே நடைபெறும் போட்டி யில், மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப டாக்டர் கோபால் பிரசாத் இந்த தந்திரத்தை கையாண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT