Last Updated : 20 Nov, 2014 09:58 AM

 

Published : 20 Nov 2014 09:58 AM
Last Updated : 20 Nov 2014 09:58 AM

தமிழக அரசின் மனுவை சட்டப்படி சந்திக்க ஆலோசனை: புதிய அணைகள் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணைகளை கட்டுவது உறுதி. அதற்கான திட்ட வரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை எதிர்க்கும் தமிழக அரசின் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் புதுடெல்லிக்கு விரைந்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் 2,500 ஏக்கர் பரப்பளவில் 2 புதிய அணைகளை கட்டி அதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க கர்நாடகம் முடிவெடுத்துள்ளது.

தமிழகம் கடும் எதிப்பு

இதற்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது' என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக ‘தி இந்து' செய்தியை மேற்கோள்காட்டி கடந்த செவ் வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.க‌ர்நாடக அரசு புதிய அணை, நீர்மின் நிலையம் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் காவிரியில் செயல் படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் மனு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா,காவிரி மேம்பாட்டு கழக அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை செய்தார்.

இதனைத் தொடர்ந்து சித்த ராமையா செய்தியாளர்ளிடம் பேசும் போது, ‘‘மேகேதாட்டுவில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதால் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. எங்களுடைய நோக்கம் உபரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் கண்டிப்பாக வழ‌ங்கப்படும். கர்நாடக அரசின் திட்டம் ஒருபோதும் மற்ற மாநிலங்களை பாதிக்காது.கர்நாடகம் புதிய‌ அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள‌ மனுவை சட்டபடி சந்திப்போம்''என்றார்.

திட்டம் நிறைவேறுவது உறுதி

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ‘தி இந்து'விடம் கூறியதாவது:

பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாநகரங்களின் குடிநீர் தேவைக்காகவே மேகேதாட்டுவில் 2 புதிய அணைகளை கட்ட முடிவெடுத்துள்ளோம். காவிரி நடுவர் மன்றம் கர்நாடகத்துக்கு வழங்கிய நீரையும் உபரி நீரையும் இந்த திட்டத்துக்கு பயன்படுத்த இருக்கிறோம்.

இந்த திட்டம் நிறைவேறினால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற் படாது. வழக்கமாக தமிழகத்துக்கு செல்லும் நீர் தடையின்றி செல்லும் என ஏற்கெனவே தெளிவு படுத்தி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் மேகேதாட்டுவில் அணை கட்டினால் வறட்சி காலத்தில் இங்கிருந்து தமிழகத்துக்கு எளி தாக நீர் திறந்துவிட முடியும்.இதனால் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் கர்நாடகத்தை எதிர்ப்பதை அர்த்த மற்றதாக கருதுகிறேன்.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்று உச்ச நீதிமன்றம் எங்களுக்கு சம்மன் அனுப் பினால் பதில் மனு தாக்கல் செய்வோம்.

இது தொடர்பாக கர்நாடக அரசின் சட்ட ஆலோசகரும்,காவிரி வழக்கில் வாதாடும் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ்.நரிமனுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். கர்நாடகத்தின் மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் சித்தராமையாவும், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திராவும் ஆலோ சனை நடத்தியுள்ளனர். எனவே சட்டப்படி தமிழகத்தை எதிர்கொண்டு, மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்று வோம்''என்றார்.

டெல்லியில் முகாம்

இதனிடையே கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மற்றும் அம்மாநிலம் சார்பாக காவிரி தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் வழ‌க்கறிஞர்கள் குழு புதன்கிழமை மாலை புது டெல்லிக்கு விரைந்துள்ளது. அங்கு மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நரிமனுடன் ஆலோசனை நடத்தி, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட உடனே பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளனர். வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்து தடைகளையும் கடந்து, மேகேதாட்டுவில் அணை கட்டும் பணிகளை தொடங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x