Published : 22 Nov 2014 09:56 AM
Last Updated : 22 Nov 2014 09:56 AM

தேர்தல் ஆணையம் ஆலோசனை த.மா.கா. பெயரை வாசன் பயன்படுத்தலாம்: மாநிலக் கட்சி அங்கீகாரம் இல்லை

புதிய கட்சி தொடங்கவுள்ள ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. த.மா.கா. முழுமையாகக் கலைக்கப்படாததால் இது சாத்தியமாகியுள்ளது. அதேசமயம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த மாநிலக் கட்சி அங்கீகாரம் தற்போது வழங்கப்படாது, சைக்கிள் சின்னமும் கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

ஜி.கே.மூப்பனார், 1996-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தொடங்கி. தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற பெயரையே தான் தொடங்கவுள்ள கட்சிக்கு வைக்க வாசன் விரும்பினார். ‘தமிழ் மாநிலக் காங்கிரஸ் (மூப்பனார்)’ என்ற பெயரில் பதிவாகி இருந்த அந்தக் கட்சி இன்னும் கலைக்கப்படாமல் பாண்டிச்சேரியில் ஒரு காங்கிரஸ் பிரமுகரிடம் பெயரளவில் இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ‘தி இந்து’விலும் ஏற்கெனவே செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து வாசனின் ஆதரவாளர்களும், பழைய த.மா.க. நிர்வாகிகளுமான ஞானசேகரன் மற்றும் கார்வேந்தன் ஆகியோர் மத்திய தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பாக விசாரித்தனர்.

அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாசனுக்கு, பழைய த.மா.க. கட்சிப் பெயர் மீண்டும் கிடைத்து உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் கூறும்போது, “த.மா.க(மூப்பனார்) கட்சியின் நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டி, அக்கட்சியைத் தொடர்வதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் அது, உயிர் பெற்று விடும். அத்தகவலை தேர்தல் ஆணையத்துக்கு அளித்தாலே போதுமானது. புதிதாக எந்த அனுமதியும் தேவையில்லை. அதேசமயம் அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்க வாய்ப்பே இல்லை,” என்றனர்.

தமாகாவின் பழைய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வாசனுடன் உள்ளனர். எனவே, அவர்களை வைத்து வாசன் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, அதன் நகலை தேர்தல் ஆணையத்திடம் நேற்று முன் தினம் ஒப்படைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், த.மா.க மீண்டும் உயிர் பெற்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை திருச்சி மாநாட்டிற்கு ஒருநாள் முன்னதாக வாசன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றிருந்த த.மா.கா, தேர்தல்களில் போட்டியிடாததால் அதனை இழந்து விட்டது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் த.மா.க. போட்டியிட்டால் ஏதேனும் ஒரு சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x