Published : 27 Jul 2017 04:08 PM
Last Updated : 27 Jul 2017 04:08 PM
மெகா கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் மூலம் பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென தனது பதவியை நேற்று (புதன்கிழமை) ராஜினாமா செய்தார். ஊழல் புகாரில் சிக்கிய தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார். இதையடுத்து பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். நிதிஷின் இந்த முடிவை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் அந்த வரிசையில் மாயாவதியும் இணைந்துள்ளார்.
நிதிஷ் பாஜகவின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது தொடர்பாக மாயாவதி, "பிஹாரில் அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகள் நாட்டின் ஜனநாயக மாண்புக்கு உகந்தது அல்ல. பிஹார் மக்கள் மோடி அலைக்கு எதிராகவே வாக்களித்தனர். அதன் காரணமாகவே மதச்சார்பற்ற கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை வழங்கினர். மக்களுக்கு மதிப்பளித்து 5 ஆண்டுகளுக்கு அந்த ஆட்சியை தொடர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், மெகா கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் மூலம் பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார். ஆட்சி அதிகார வேட்கையில் இருக்கும் பாஜக மாநில அரசை தவறாகப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ய நினைப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல். மணிப்பூர், கோவா, பிஹார் மாநிலங்களின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் மோடி ஆட்சியின் கீழ் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு ஓர் உதாரணம்.
எதிர்க்கட்சியினர் ஊழல் செய்வதாக வெளிப்படையாக பிரச்சாரம் செய்துகொண்டும் அதை நிரூபிக்க மெனக்கிடலில் இறங்கியும் மோடி அரசு தனது தோல்விகளையும் தவறுகளையும் மறைத்து மக்களை திசை திருப்ப முயல்கிறது" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT