Published : 11 Jul 2017 06:55 PM
Last Updated : 11 Jul 2017 06:55 PM
அமர்நாத் யாத்திரிகர்கள், போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படை மீது தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது.
ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம், துணைராணுவப் படை ஆகியவற்றுக்கு 2 வாரங்களுக்கு முன்பே அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த உளவுத்துறை அறிக்கை ‘டாப் சீக்ரெட்’ என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் 25-ம் தேதியிடப்பட்ட இந்த மெமோவில் 100-150 யாத்திரிகர்கள் மற்றும் 100 போலீஸார்களை அழிக்க தீவிரவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த மெமோ உண்மையானது என்று அசோசியேட்டட் பிரஸ் உறுதி செய்துள்ளது.
அதாவது அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் நாடு முழுதும் மதக்கலவரங்களைத் தூண்டிவிட முயற்சி செய்யப்பட்டுள்ளது என்று அந்த மெமோவில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு இந்தத் தாக்குதலுக்கு பிரிவினைவாதிகளைச் சாடியுள்ளது, ஆனால் மாறாக பிரிவினைவாதிகள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டதோடு, தங்களுக்கும் இதற்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.
முதலில் ஆயுதமேந்திய போலீஸ் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிக் குண்டுகளை பிரயோகித்தனர், ரோந்துப் போலீஸ் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த போது 60 யாத்திரிகர்களுடன் பேருந்து அப்பகுதியைக் கடந்து சென்றுள்ளது, அப்போது பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடததாக போலீஸ் தரப்பினர் கூறுகின்றனர்.
இரவில் பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும் மீறி இந்தப் பேருந்து இரவில் பயணத்தை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்புக்காக இப்பகுதிகளில் படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து செய்வதில்லை.
பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இந்தத் தாக்குதலை விவரிக்கின்றனர். தீவிரவாதிகள் 3 திசைகளிலிருந்து பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு சாட்சியம் கூறுகிறது. அனந்த்நாக் அருகே குண்டு மழை பொழிந்தாலும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே சென்றார்.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி கிலானி, மிர்வைஸ் பரூக், யாசின் மாலிக் ஆகியோர் கூட்டறிக்கையில், “காஷ்மீர் பண்பாட்டுக்கு எதிரானது” என்று கண்டித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் தீவிரவாதிகள் இவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் லஸ்கர் இதற்கு பொறுப்பேற்க மறுத்துள்ளதோடு, இது ‘இஸ்லாத்துக்கு எதிரானது’ என்று கூறியுள்ளதாக ஸ்ரீநகர் உள்ளூர் ஊடகம் ஒன்றில் அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. மேலும் அந்தக் குழு கூறிய போது, “எந்த ஒரு காஷ்மீரியும் யாத்திரிகர்களைத் தாக்க மாட்டார்கள். இந்த காட்டுமிராண்டித் தனமும் அராஜகமும் இந்திய பாதுகாப்புப் படையினரின் முத்திரையாகும்” என்று சாடியுள்ளது.
இந்தத் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் உட்பட கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே அகமதாபாத் மாணவர்கள் அனைத்து மத வன்முறைகளுக்கு எதிராகவும் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT