Published : 21 Jul 2017 08:34 PM
Last Updated : 21 Jul 2017 08:34 PM
வாட்ஸ் ஆப் தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றத்தில், குடிமக்களின் தனிநபர் உரிமை அடிப்படை உரிமையே என்றும் அவை காக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் வழக்கில் பயோமெட்ரிக் தரவுகளைச் சேகரிப்பது தனிநபரின் வாழ்வுக்கான உரிமைக்கு எதிரானது, அடிப்படை உரிமையை மறுப்பது என்று பல மனுக்கள் குவிந்து அது உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு காரசார விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் நேர் எதிரான நிலைப்பாட்டை தற்போது வாட்ஸ் ஆப் தொடர்பான வழக்கில் எடுத்துள்ளது.
மாணவர்கள் தனிநபர் உரிமையை நிலைநாட்டுவதற்காக தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு, எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் சேவை வழங்குநர் எந்த ஒருவரின் சொந்த விவரங்களை, தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 21-ன் கீழ் தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று தெரிவித்தது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா கூறும்போது, “என்னுடைய ஆளுமை, வாழ்க்கை தொடர்பான தரவுகள் என் வாழ்க்கைக்குரியது, கவுரவத்திற்குரியது எனவே 21-ம் சட்டப்பிரிவுக்கு முரணாக நடைபெறுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்று வாதிட்டார்.
மாறாக ஆதார் வழக்கில் தனிநபர் உரிமை என்பது சாதாரண சட்ட உரிமைதானே தவிர அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று மத்திய அரசு வாதிட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT