Published : 12 Nov 2014 05:43 PM
Last Updated : 12 Nov 2014 05:43 PM
2013-ஆம் ஆண்டில் மட்டும் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களினால் இந்தியாவில் 3 லட்சம் குழந்தைகள் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் புளூம்பர்க் பொதுச் சுகாதாரப் பள்ளியின், சர்வதேச நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ‘நியுமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு சிகிச்சை அறிக்கை’யில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெஃப் அமைப்பின் விவரங்களை மேற்கோள்காட்டி இந்த வெளியீட்டில் தெரிவிக்கும்போது, “நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களுக்கு இந்தியாவில் 2013-ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
3 லட்சம் குழந்தைகளில் நியுமோனியா நோய்க்கு 5 வயதுக்குட்பட்ட சுமார் 1.7 லட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட விவரம்:
நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களால் ஏற்படும் மரண விகிதம் உலக அளவில் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றாலும், மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் இது இன்னமும் இறப்பு விகித அதிகரிப்பை தீர்மானிக்கும் ஒரு காரணியாக உள்ளது.
எனவே வாழ்க்கையின் எந்த சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் நியுமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுக்கும் பல சிகிச்சை முறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி ஒவ்வொரு குழந்தையும் தங்களது 5-வது பிறந்த நாளைக் கொண்டாட வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
நிமோனியா, வயிற்றுப்போக்கு நோய் சிகிச்சைக்கான உலக செயல்திட்டத்தில் சோடை போயுள்ள 15 நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. நோய் தடுப்பு வாக்சைன்கள், தாய்ப்பால், சிகிச்சை அனைவரையும் சென்றடையும் வசதி, ஆன்ட்டி-பயாடிக் மருந்துகளின் பயன்பாடு, துத்தநாகத்தின் மருத்துவ பயன்பாடு என்று உலகச் சுகாதார மையம் ஒருங்கிணைந்த செயல் திட்டத்திற்கான அடிப்படைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் நிமோனியா, வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணங்கள் பெரிய சவாலாகத் திகழ்கிறது என்றாலும், மத்திய அரசு சமீபத்தில் குழந்தைகள் உடல் நலத்தில் எடுத்துக் கொண்டுள்ள சிறப்பு அக்கறையினால் இந்தியா சோடை போயுள்ள நாடுகளிலிருந்து தன்னை விரைவில் விடுவித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
நியுமோனியா என்பது நுரையீரலில் வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகளின் தாக்கத்தினால் ஏற்படும் பெரிய அளவிலான அழற்சி என்பது குறிப்பிடத்தக்கது. முறையான நோய் தடுப்பு அமைப்பு முறைகள் இருந்தால் இதனை சுலபமாக எதிர்கொண்டு முறியடிக்கலாம். ஆனால் சிகிச்சையை அனைவரும் எளிதில் அணுக வழிவகை செய்யப்படுவது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT