Published : 27 Jul 2017 08:12 AM
Last Updated : 27 Jul 2017 08:12 AM
‘தமிழகத்தைச் சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள்’ என்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கைய நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால்கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க தாங்கள் முடிவு எடுத்திருப்பதை நான் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். அரசியல் தர்க்கத்துக்கு உட்பட்ட பல காரணங்கள் இதற்கு இருக்கும். பிஹாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகள் தங்கள் ஆதரவை இரண்டாகப் பிரித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பது என்றும், துணை குடியரசு தலைவர் தேர்தலில் என்னை ஆதரிப்பதென்றும் முடிவெடுத்துள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் முதல் ஆதரவு வாக்குகள் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது எனும்போது, அடுத்த வேட்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த எனக்கு இரண்டாவது ஆதரவு வாக்குகளை அளிப்பதே இயல்பும் பொருத்தமும் ஆகும்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளேன். அதன் பிரதியை இணைத்துள்ளேன். இதற்கான தங்கள் இசைவை அவர்களுக்கு உணர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கோபாலகிருஷ்ண காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தமிழக எம்.பி.க்களுக்கு கோபால்கிருஷ்ண காந்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப் பதாவது:
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் இணைந்து என் பெயரை முன்மொழிந்துள்ளன. தங்கள் கட்சியான அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது. இதன் அரசியல் தர்க்கத்தை நான் அறிவேன். ஆயினும் தங்கள் மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் என்ற முறையில் தங்கள் ஆதரவைக் கோர எனக்கு உரிமை உண்டு. மேலும், இந்திய ஆட்சிப் பணியின் அதிகாரியாக எம்.ஜி.ஆரின் கீழ் பணியாற்றியவன் என்ற கூடுதல் தகுதியும் எனக்கு உண்டு. தங்கள் 2-வது ஆதரவு வாக்கை தாங்கள் பயன்படுத்தாமல் விடக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்த சக இந்தியருக்கு அந்த வாக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கோபால்கிருஷ்ண காந்தி கூறியுள்ளார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT