Last Updated : 11 Nov, 2014 10:57 AM

 

Published : 11 Nov 2014 10:57 AM
Last Updated : 11 Nov 2014 10:57 AM

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த கட்சிகள் 60: தமிழகம், புதுவையில் பத்தாவதாக ஜி.கே.வாசன்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து இதுவரை சுமார் அறுபது கட்சிகள் உதயமாகிவிட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இவ்வாறு உதயமான கட்சிகளில் பத்தாவதாக ஜி.கே.வாசனின் கட்சி உள்ளது.

நம் நாட்டின் மிகப் பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் நீண்ட வரலாறு கொண்டது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது. கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தந்த காலத்தில் தலைவர்கள் பிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கியுள்ளனர். இதன்படி நாடு சுதந்திரம் அடைந்தபின் இதுவரை காங்கிரஸில் இருந்து 60 கட்சிகள் உதயமாகியுள்ளன.

இவ்வாறு பிரிந்த கட்சிகளில், தற்போது சோனியா காந்தி தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் ஒன்று. இது, அகில இந்திய காங்கிரஸ் (இந்திரா காந்தி) என்ற பெயரில் உடைந்து மீண்டும் தனது தாய் கட்சியாக பெயர் மாறியது.

இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்த பெரும்பாலான கட்சிகள் கலைக்கப்பட்டு அதன் தலைவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைந்து விட்டனர். இன்னும் சிலர் ஜனதா கட்சியிலும், பின்னர் உருவான பாரதிய ஜனதாவிலும் இணைந்தனர். இதில் பல செயல்படாத கட்சிகளாக மாறிவிட்டன. மீதம் உள்ளவற்றில் எதுவும் தேசிய கட்சியாக இல்லை என்றாலும், மாநிலக் கட்சிகளாக ஒருசில கட்சிகள் தொடர்கின்றன.

சரத்பவார், மம்தா

சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜாம்புவத்ராவ் தோதே தொடங்கிய விதர்பா ஜனதா காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மகாராஷ்டிரத்தில் மாநிலக் கட்சிகளாக இயங்கி வருகின்றன.

மம்தா பானர்ஜி தொடங்கிய அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக வளர்ந்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அம்மாநிலத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. இங்கு முன்னாள் முதல்வர் என்.கிரண்குமார் ரெட்டி தொடங்கி ஜெய் சமைக்கி ஆந்திரா கட்சிக்கு தேர்தலில் ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பிரிந்தவை

தமிழகத்தில் முதலாவதாக 1956-ல் சி.ராஜாஜி பிரிந்து இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பிறகு இதை சுதந்திரா கட்சியில் இணைத்துக்கொண்டார். இதையடுத்து குமரி அனந்தன், ‘காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்’ என்ற பெயரில் கட்சியை தொடங்கியவர் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்தார். இவரது காலத்திலேயே பழ.நெடுமாறனும் பிரிந்து தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். இவரது கட்சி செயல்படாமல் போய் விட்டாலும் நெடுமாறன் பிறகு எந்தக் கட்சியிலும் சேரவில்லை.

பிரிந்து இணைந்த ப.சிதம்பரம்

1988-ல் பிரிந்த சிவாஜி கணேசன், தமிழக முன்னேற்ற முண்ணனி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, அதை பிறகு ஜனதா தளத்தில் இணைத்தார். 1996-ல் ஜி.கே.மூப்பனார் பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸும் அதில் இருந்து 2001-ல் ப.சிதம்பரம் பிரிந்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையும் தொடங்கினர்.

பின்னர் இருவரும் தங்கள் கட்சிகளை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தனர். 1997-ல் தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் பிரிந்த வாழப்பாடி ராமமூர்த்தி, மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். பிறகு மீண்டும் பிரிந்து தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய அவர் திரும்பவும் காங்கிரஸில் இணைந்தார்.

புதுச்சேரியில் பிரிந்தவை

புதுச்சேரியில் பி.கண்ணன், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸை தொடங்கி மீண்டும் காங்கிரஸுடன் இணைத்தார். பிறகு இரண்டாவது முறையாக பிரிந்து புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தொடங்கிய அவர் திரும்பவும் காங்கிரஸில் இணைந்தார்.

இவரைப் போலவே, காங்கிரஸில் இருந்து பிரிந்த என்.ரங்கசாமி, தனது பெயரிலேயே என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தற்போது அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார். இந்தப் பட்டியலில் தற்போது பத்தாவதாக ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்க இருக்கிறார்.

கடைசியாக பிரிந்தவர்கள்

தமிழகத்தில் கடைசியாக நேற்று முன்தினம், முன்னாள் எம்எல்ஏ குறளரசு ஜெயபாரதி மற்றும் தமிழக காங்கிரஸின் ஆதி திராவிடர் பிரிவின் முன்னாள் தலைவர் செங்கை செல்லப்பன் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x