Published : 28 Jul 2017 11:23 AM
Last Updated : 28 Jul 2017 11:23 AM

போதைப்பொருள் சிக்கிய விவகாரம்: விசாரணை குழு முன் நடிகர் ரவிதேஜா ஆஜர்

ஹைதராபாத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ரவிதேஜா கலால் துறை புலனாய்வு குழு முன் ஆஜரானார்.

ஹைதராபாத்தில் உள்ள பள்ளியில் போதைப்பொருள் விநியோகம் குறித்து கலால் துறையினர் நடத்திய விசாரணையில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் மகன்கள், தொழிலதிபர்களின் மகன்கள் போதைப்பொருளை உபயோகித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி 19 பேரை கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்களின் தொலைபேசியில் தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் இருந்ததால் இது குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் கடந்த 19ம் தேதி முதல் இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, கலை இயக்குனர் சின்னா ஆகியோரிடம் கலால் துறை விசாரணை குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் ரவிதேஜா இன்று காலை விசாரணை குழு முன் காலை 10.05 மணிக்கு ஆஜரானார். இவரிடம் விசாரணை குழுவினர் சரமாரி கேள்விகள் கேட்டு வருகின்றனர். பிடிபட்ட போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்புடைய சிலரது தொலைபேசிகளில் நடிகர் ரவிதேஜாவின் செல்போன் எண்ணும் ‘கால் லிஸ்டில்’ உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரவிதேஜா வின் தம்பியும் நடிகருமான பரத் சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே போதைப்பொருள் விநியோகம் வழக்கில் கைதாகி விடுதலையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2வது பட்டியல் தயார்:

தெலுங்கு திரையுலகை கலங்க வைத்திருக்கும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் முதற்கட்டமாக 12 சினிமா துறை பிரபலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் தற்போது வரை 9 பேரை விசாரித்துள்ளனர். இந்நிலையில், அடுத்த கட்டமாக மேலும் சில சினிமா பிரபலங்களுக்கு நோட்டீஸ் வழங்க இருப்பதாக கலால் துறை விசாரணை குழுவினர் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x