Last Updated : 11 Nov, 2014 06:53 PM

 

Published : 11 Nov 2014 06:53 PM
Last Updated : 11 Nov 2014 06:53 PM

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி எதிர்ப்பினால் சிபிஐ மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு

2ஜி வழக்கில் அரசுதரப்பு கூடுதல் சாட்சியாக மேலும் சிலரை அழைக்க சிபிஐ செய்திருந்த மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் தள்ளி வைத்தது.

அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், உதவி இயக்குனர் சத்யேந்திர சிங், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் நவில் கபூர், மற்றும் வங்கி அதிகாரி டி.மணி உட்பட மேலும் சிலரின் வாக்குமூலங்களைப் பெற சம்மன் அளிக்க நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்திருந்தது.

ஆனால் சிபிஐ-யின் இந்த மனுவை ஆ.ராசா, மற்றும் கனிமொழி ஆகியோர் எதிர்த்துள்ளனர்.

சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி, எதிர்தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு சிபிஐ மனு மீதான உத்தரவை நவம்பர் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த மனுவை ராசா மற்றும் கனிமொழி சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், விசாரணை முடியும் கட்டத்தை நெருங்குகையில் சிபிஐ இந்த மனுவைச் செய்திருப்பது பற்றி தங்கள் தரப்பு ஐயங்களை எழுப்பினர்.

ஏற்கெனவே சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு கடைசி நேரத்தில் மீண்டும் இந்தக் கோரிக்கையை வைத்திருப்பது சிபிஐ-யின் சூழ்ச்சியைக் காண்பிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட சில தொழிலதிபர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆ.ராசா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் வாக்குமூலங்களை சிபிஐ பதிவு செய்ய கோரியுள்ளது. ஆனால் சாட்சியாக அவற்றை எடுத்துக் கொள்ள முடியாது என்றும், சிபிஐ-க்கு நீதிமன்றம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கினாலும், நீதிமன்றம் அவற்றை நம்பகமான சாட்சியாக ஏற்றுக் கொள்ள முடியாது. என்றார்.

அதே போல் கனிமொழி வழக்கறிஞரும், இந்த கோரிக்கை மனுவை மிகவும் தாமதமான நிலையில் சிபிஐ செய்துள்ளது என்றும், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு முடிந்த நிலையில் மீண்டும் சம்மன் அனுப்ப கோரிக்கை வைப்பது கூடாது ஆகவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

சிபிஐ மனுவை குற்றம்சாட்டப்பட்ட பலரும் எதிர்க்க, சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், சாட்சியங்கள் விசாரணை முடிந்த பிற்பாடும், மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்றார். மேலும், இந்த வழக்கிற்கு அதில் நிறைய தொடர்பு உள்ளது. சம்மன் அனுப்பக் கோரிய 5 பேரிடமும் ஒரு வாரத்தில் விசாரணை செய்து முடிக்கப்படும் என்றார்.

முன்னதாக சிபிஐ-யின் இந்த மனு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டோரின் பதில்களை நீதிமன்றம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x