Published : 27 Jul 2017 11:57 AM
Last Updated : 27 Jul 2017 11:57 AM
போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஹைதராபாத்தில் கலால்துறை புலனாய்வு விசாரணைக் குழு முன் நடிகை முமைத்கான் ஆஜரானார். இவரிடம் பெண் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் கடந்த 19ம் தேதி முதல் தெலுங்கு சினிமா துறையைச் சேர்ந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர்கள் தருண், சுப்பராஜு, நவ்தீப், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, கலை இயக்குநர் சின்னா, நடிகை சார்மி ஆகியோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டது. இதில் நடிகை சார்மி, தன்னை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டுமெனவும், ரத்த பரிசோதனை செய்யக் கூடாது எனவும், காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே விசாரணை நடத்த வேண்டுமெனவும் ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற உயர் நீதிமன்றம் சார்மி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்திற்கும் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த நடிகை முமைத்கானும் இந்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டது. நேரிடையாக பிக் பாஸ் நிர்வாகத்தினருக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், நேற்று இரவு, முமைத்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பூனேவிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். இன்று காலை முமைத்கான் நாம்பல்லியில் உள்ள விசாரணைக் குழு முன் ஆஜரானார். முமைத்கான் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளதால், மற்ற சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் உள்ளதா? எனவும் சரமாரி கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT